தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது

113 Views

தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிடும் அறிக்கை

 தமிழ்நாட்டிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு முஸ்லிம்களைக் கைது செய்து அவர்களைச் சிறையில் அடைத்திருப்பதைத் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து அவர்களுக்கு நாடுகளுக்குத் திருப்பி அனுப்பத் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

உலகளாவிய இயக்கமான தப்லீக் ஜமாத் என்பது  அமைதி வழியில் தங்களைத் தாங்களே பண்படுத்திக்கொள்வதற்காக உலகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறைவழிபாடுகளை தங்களுக்குள்ளே நடத்திக்கொண்டு வரும் ஒரு ஆன்மீக பேரியக்கமாகும்

இவர்கள் பிற மதத்தவர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்யும் அமைப்பல்ல தங்களுக்குள்ளேயே ஒழுக்கம், தூய்மை, நேர்மை ,இறையச்சம் போன்றவற்றை வளர்த்துக் கொள்வதற்காக நெடுந்தூரம் பயணித்து நேர்மையோடு வாழக்கூடியவர்கள். வாழ்நாளில் யாருக்கும் எதற்கும் உள்ளத்தால் தீங்கிழைக்கக் கூடாது என்ற லட்சியத்தைச் சுமந்து சொந்த காசில் இறை தியானத்திற்காக ஊரு விட்டு ஊர் நாடு விட்டு நாடு என ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள்.

இவர்களால் உலகம் முழுவதும் எந்த விதமான சர்ச்சையோ, பதட்டமோ இதுவரை எங்கும் ஏற்பட்டதாக ஒரே ஒரு நிகழ்வுகூட இல்லை. இப்படிப்பட்ட ஒரு ஒழுக்கம் சார்ந்த ஆன்மீகவாதிகளைத் தேவையில்லாமல் சர்சைக்குள்ளாக்குவதும் சங்கடப்படுத்துவதும் வேதனை அளிக்கிறது

முறையாக விசா பெற்று தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த வெளிநாட்டு முஸ்லிம் ஆண் மற்றும் பெண் பயணிகளான அவர்களை ஏதோ   கள்ளத்தோணியில் வந்தவர்களைப் போலவும் தீவிரவாதிகளைப் போலவும்  தமிழக அரசு நடத்துவது கண்டனத்திற்குரியதாகும்

முறையான அனுமதியோடு உரிய ஆவணங்களோடு வந்து அரசுக்குத் தெரிந்த நிலையில் தங்கி இருந்தவர்களை எல்லாம் பதுங்கி இருந்தவர்கள் என்று குறிப்பிட்டு சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரச்சாரம் செய்ததாக கூறி அவதூறாகக் கைது செய்திருப்பது எந்தவகையில் நியாயம்?

அவர்கள் எங்குப் போய் எவரிடம் மதப்பிரச்சாரம் செய்தார்கள்? பள்ளிவாசல்களில் தங்கி முஸ்லிம்களிடம் பேசுவது எப்படி மதப்பிரச்சாரமாகும்? இதே போல் ஆன்மீக சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்த பிற மதத்தவர்களை கைது செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளதா?

முறையான அனுமதி  பெற்று வெளிநாட்டு முஸ்லிம் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளை முறையற்ற வகையில் கைது செய்வதும் சிறையிலடைப்பதும் தேவையற்ற செயலாகும். அதரமற்ற அவதூறு குற்றச்சாட்டின் பேரில் அவர்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது மனித நேயமற்ற செயலாகும். இந்த நடவடிக்கை மூலம் மத்திய பாஜக அரசின் முஸ்லிம் விரோத மனப்பான்மையைத் தமிழக அரசும் கையிலெடுத்துள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகிறது

எனவே பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ள அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்லும்வரை அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும் எனத் தமிழக அரசை இஸ்லாமியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது

இப்படிக்கு

மவ்லானா பி. ஏ. காஜா மொய்னுதீன் பாகவி

தலைவர்

மவ்லானா எம் முஹம்மது மன்சூர் காஸிமி

ஒருங்கிணைப்பாளர்

அல்ஹாஜ் எம் பஷீர் அஹ்மது

ஒருங்கிணைப்பாளர்

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map