தமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம்! : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி

907 Views

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பொங்கல் வாழ்த்துச் செய்தி:

தமிழர் திருநாளான தைப்பொங்கல் நன்னாளைக் கொண்டாடும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எமது அகங்கனிந்த நல்வாழ்த்துகள்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என்ற முத்தான தத்துவத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முன்மொழிந்து, உலக சகோதரத்துவத்தின் ஊற்றுக்கண்ணாய்த் திகழ்ந்த பெருமை தமிழினத்திற்கு உண்டு. அகில மக்கள் அனைவரும் ஆதம், அவ்வா இணையரின் வழித்தோன்றல்களே என்பதற்கு இலக்கியச் சான்றுகள் பலவற்றை தமிழினமே வைத்துள்ளது. ஆதம்+தந்தையார்=ஆந்தையார், ஔவ்வையார் ஆகிய சங்கப் புலவர்களின் பெயர்களே இதற்குச் சான்றுகள் ஆகும்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே திருவள்ளுவரின் திருக்குறள் சமூக சமத்துவத்தை ஓங்கி முழங்கியுள்ளது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலில் அனைத்து மக்களின் மீதும் அன்பைப் பொழிந்திடும் அக மனப்பான்மையை வளர்த்திட உறுதியேற்போம்.

தைப்பொங்கல் என்பதே அறுவடைத் திருநாளாகும். அந்நாளில் உழவர்களுக்கு உலகம் நன்றி கூறும் நன்மரபைத் தமிழகம் பேணி வந்துள்ளது.

இந்தியத் தலைநகரில் இலட்சக்கணக்கான உழவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடுங்குளிரில் நடத்திவரும் அறப்போராட்டத்தை மத்திய அரசு ஈவிரக்கமற்று அணுகும் கொடுமையால் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
உழவர் திருநாளான தமிழர் திருநாளில் விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கைகள் வெல்ல அனைவரும் அவர்களுடன் நின்று ஆதரவளிப்போம்

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply