அதிவாசி மக்களின் உரிமைக்காகப் பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி கைது அராஜகத்தின் உச்சம்!

445 Views
ஆதிவாசி மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமை போராளி 83 வயதுடைய பாதிரியார் ஸ்டேன் சாமி அவர்களை பீமா கோரகான் வழக்குடன் தொடர்புப்படுத்தி தேசீய புலனாய்வு முகமை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
 
பீமா கோராகானில் கடந்த 2018 ஜனவரி 1ம் தேதி நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் எனப் பொய் குற்றம் சுமத்தி என்ஐஏவினால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடை சட்டம் (யுஏபிஏ)வில் கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் வயது முதிர்ந்தவர் பாதிரியார் ஸ்டேன் சாமி ஆவார்.
 
தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் சாமி அவர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் மனித உரிமை பாதுகாப்புப் பணிகளில் குறிப்பாக ஆதிவாசி மக்களிடையே தன்னலமற்ற பணிகளை ஆற்றி வந்தார். இவருக்கும் பீமா கோரோகன் நிகழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையிலும் பாதிரியார் சாமி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திலிருந்து கடத்தப்பட்டு பிறகு கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
15 மணி நேரம் விசாரிக்கப்பட்ட நிலையில் 83 வயதான பாதிரியார் சாமியைக் கைது செய்ததுடன் மும்பைக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என என்ஐஏ திட்டமிட்டுள்ளது.
 
உச்சநீதிமன்றம் விதித்துள்ள முறைமைகளுக்கு முரணாக ஸ்டேன் சாமியை கைது செய்துள்ள நிலையில் நடுக்குவாதம் என்னும் பார்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவரை மும்பைக்கு அழைத்துச் செல்ல முயல்வது அராஜகத்தின் உச்சமாக அமைந்துள்ளது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பவர்களைப் பழிவாங்கும் மத்திய பாஜகவின் வன்ம மனப்பான்மைக்கு இது ஒரு எடுத்துக் காட்டாகவும் அமைந்துள்ளது.
 
ஆதிவாசி மக்களின் நிலங்களைப் பிடுங்கி அவர்களை நிலமற்றவர்களாக மாற்றும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் நாதியற்ற அம்மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்.
Leave a Reply