திருச்சி திருவானைக்கோவில் பள்ளிவாசல் இடிப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

489 Views
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் ஶ்ரீரங்கம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் திருவானைக்காவல் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்துள்ள அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பள்ளிவாசல் தரப்பில் பள்ளிவாசலை இடிக்கக் கூடாது என்று உரிய நீதிமன்ற தடை ஆணைகளைப் பெற்றிருந்த நிலையிலும் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் காவல்துறையினரின் அனுமதியுடன் இடித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பள்ளிவாசல் முன் பகுதியை இடித்ததுடன் பள்ளிவாசல் நிர்வாகிகளை காவல்துறையினர் தாக்கியதையும் வன்மையாக கண்டிக்கிறேன். இதே அளவில் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள தனியார் கட்டடங்களை தீண்டாத அரசு அதிகாரிகள் பள்ளிவாசல் முன்பகுதியை மட்டும் இடித்து தமது பாரபட்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு உடனடியாக இடிக்கப்பட்ட பள்ளிவாசல் பகுதியை மீண்டும் கட்டி தருவதற்கும் அத்துமீறி பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
Leave a Reply