கொரோனா ஆபத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானக் கடைகளைத் திறக்க உத்தரவிட்ட அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புச் சட்டை அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்புவோம்!

568 Views
கொரோனா ஆபத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானக் கடைகளைத் திறக்க உத்தரவிட்ட அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புச் சட்டை அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்புவோம்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

கொரோனா பாதிப்பால் தமிழகம் திண்டாடிவரும் சூழலில் மதுக்கடைகளைத் திறந்து மேலும் கொரோனா தொற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கும் எடப்பாடி அரசைக் கண்டித்துக் கறுப்புச் சின்னம் அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்ப திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் நாளை நடத்த முடிவு செய்துள்ள போராட்டத்தில் முழுமையாகப் பங்கு கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா பாதிப்புகளை உணர்ந்து, அதைப்பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் பலமுறை எடப்பாடி அரசிற்குக் கோரிக்கை வைத்தும், அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகின்றது. தமிழக அரசு. ஊரடங்கை மக்கள் ஒழுங்கான முறையில் கடைப்பிடித்த நிலையில் உரிய ஆலோசனை இல்லாமல் திடீரென சென்னை உள்ளிட்ட நான்கு மாநகராட்சிகளில் 4 நாட்கள் தொடர் ஊரடங்கு என அறிவித்து மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கி, அவர்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு போன்ற இடங்களில் கட்டுக்கடங்காமல் கூடியதுதான் கொரோனா தொற்று அதிகமாகக் காரணமாகும்.

இந்நிலையில் மே 7ம் தேதி முதல் அரசு மதுபான கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது..

மது போதையில் தன்நிலை அறியாத மனிதன் எப்படித் தனி மனித விலகலை கடைப்பிடிப்பான்? ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் 2 காவலர்கள், 2 ஊர் காவல் படையினர், ஒரு தன்னார்வலர் என 5 பேரைப் பாதுகாப்புக்காக பணியமர்த்தி மக்கள் பாதுகாப்பிற்கு பணியாற்ற வேண்டியவர்களைக் குடிகாரர்களுக்காக பணியாற்ற வைப்பது வெட்க கேடானது.

அதிமுக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், கொரோனாவை டாஸ்மாக் மூலம் பரப்பும் செயலை கண்டித்தும் நாளை (மே7) காலை 10 முதல் 10:15 வரை அவரவர் வீட்டு வாசலில் 5 நபர்களுக்கு மிகாமல் நின்று மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கறுப்புச் சட்டை அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்புவார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001

Leave a Reply