ஷரீஅத் சட்டத்தை பாதுகாக்க கையொப்பமிடுவோம் மோடி அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்

1141 Views

அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஷரீஅத் சட்டத்தை பாதுகாக்க கையொப்பமிடுவோம்
மோடி அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்

law
கண்ணியத்திற்குரிய பெரியார்களே! தாய்மார்களே!
அன்பிற்கினிய இளைஞர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் பரப்பவும் உரிமை அளித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள இந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் பல்வேறு மதத்தினர் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை முதலியவற்றில் தத்தமது தனியார் சட்டங்களை பின்பற்றி வருகின்றார்கள்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் காலங்காலமாக திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை முதலியவற்றில் ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தை பின்பற்றி வருகிறோம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக நீண்ட காலமாக பொது சிவில் சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வந்துள்ளது. முஸ்லிம்கள் திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவதை தடுக்க வேண்டும் என்பதே அவர்களது நீண்ட கால கனவு.

இந்த நிலையில் சில பெயர் தாங்கி முஸ்லிம் பெண்கள் ‘தலாக்’ நடைமுறை குறித்து தாக்கல் செய்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசின் நிலை என்னவென்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை – அதாவது முஸ்லிம்கள் திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமையில் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதன் முதல் படியாக தான் இந்திய சட்ட ஆணையம் பொது மக்களின் கருத்தறிய என்று சொல்லி 16 கேள்விகள் கொண்ட ஒரு வினா பட்டியலை (Questionnaire) வெளியிட்டுள்ளது. இதில் உள்ள ஒரேயொரு கேள்வியைத் தவிர ஏனைய கேள்விகள் அமைத்தும் குதர்க்கம் நிறைந்தவையாக உள்ளது. முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தை பாதிக்கும் ஒரு பிரச்னைக்கு இது போன்ற ஒரு கேள்வி பட்டியல் மூலம் கருத்தறிய முயலுவது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளை பறிக்கும் ஒரு சதித் திட்டமே.

இந்த உண்மையை உணர்ந்து தான் Law Commission -சட்ட ஆணையத்தின் மூலம் மோடி அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை சிறுபான்மை மக்களுக்கு எதிரான போராக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) வர்ணித்துள்ளது. சட்ட ஆணையத்தின் வினா பட்டியலை முற்றிலும் புறக்கணிக்குமாறு முஸ்லிம்களுக்கு அது வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் செயல்படும் அனைத்து முஸ்லிம்களின் பல்வேறு சிந்தனைப் பிரிவைச் சார்ந்த நிறுவனங்கள், இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவ அமைப்பு தான் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நமது உயிரினும் மேலான ஷரிஅத் சட்டத்தில் கைவைக்க மோடி அரசு எடுத்து வரும் முயற்சிகளை முறியடிக்க முன்வர வேண்டும். இதற்கான முயற்சிகளில் ஒன்றாக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் ஒரு கையெழுத்து இயக்கத்தை நாடு முழுவதும் நடத்தி வருகின்றது.

கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம் ஆண்களும் பெண்களும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பாக உள்ளார்கள் என்பதை மோடி அரசுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் சட்ட ரீதியாக உணர்த்துவதற்கு தான் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் இந்த முடிவுகளை ஆதரிப்பதுடன் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்துவது என்று முடிவெடுத்துள்ளது.

– திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட நிகழ்வுகளுக்கான ஷரிஅத் சட்டத்தில் நாங்கள் முழு திருப்தி அடைகிறோம்.

-எந்த வடிவத்திலும் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

-இது தொடர்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி கூறும் கையெழுத்து படிவத்தில் கையொப்பமிட்டு ஷரிஅத் சட்டத்தை பாதுகாக்க உங்களது பங்களிப்பை செலுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள நமக்கான உரிமைகளை காக்க உடனே நீங்களும் கையொப்பமிடுவீர் உறவினர்கள் நண்பர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்

ஷரிஅத்தை காப்பது நமது மார்க்க கடமை அது நமது இறை நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை பறைச்சாற்றுவோம்.

இவண்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

குறிப்பு
1. கையெழுத்து படிவங்கள் உங்கள் ஊரில் உள்ள எமது நிர்வாகிகளிடம் கிடைக்கும்.அல்லது எமது இணையத்தளத்திலிருந்து (www.tmmk.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்
2.படிவங்களை நிரப்பி 30.10. 2016க்கு முன்னதாக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
தலைமையகம்
7 வட மரைக்காயர் தெரு
சென்னை 600 001
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மின் அஞ்சல் : tmmkhq@gmail.com

Leave a Reply