161-வது பிரிவை பயன்படுத்தி விடுதலை வேண்டும்… சட்டப்பேரவையில் உரை.

1852 Views

22.01.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் ஆளுநர். உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாத்த்தில் நான் ஆற்றிய உரையின். ஒரு பகுதி.

பேரா. முனைவர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA.

Feb-7

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதே சட்டப்பேரவையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான அந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தினுடைய 161வது பிரிவின்கீழ் அது இரத்து செய்யப்பட்டது. அதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலே உச்சநீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதி திரு. சதாசிவம் அவர்கள் தலைமையிலான அமர்வு, தமிழக அரசு அந்தத் தூக்குத் தண்டணையை இரத்து செய்ததை ஒப்புக்கொண்டு, அந்தத் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கிலே, சமீபத்தில் மீண்டும் டிசம்பர் 2ஆம் தேதி உச்சநீதிமன்றத்தினுடைய முழு அமர்வு ஒன்று ஒரு தீர்பை வழங்கியிருக்கின்றது. அந்தத் தீர்ப்பிலே, இவ்வாறு ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை, முன்கூட்டியே மாநில அரசு விடுவிக்க முடியாது என்று பரவலாக சொல்லப்படுகின்றது. நான் அந்தத் தீர்ப்பை முழுமையாக வாசித்துப் பார்த்தேன். அதில் மிகத் தெளிவாக ஒரு இடத்திலே அரசியலமைப்புச் சட்டத்தினுடைய 161-வது பிரிவு, மாநில அரசுக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கான தண்டனையை முழுமையாக இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ அளிக்கப்பட்டிருக்கக் கூடிய உரிமை It is an unfettered right யாருமே தலையிடமுடியாத ஒரு உரிமை என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். அதாவது, அரசியல் சாசன சட்டத்தின் 161-வது பிரிவு, ஆளுநருக்கு வழங்கியிருக்கும் இறையாண்மை மிக்க அதிகாரத்தையோ, இ.பி.கோ. பிரிவு 54 மற்றும் குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 434 மாநில அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தையோ, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிர்வாக ரீதியான அறிவுறுத்தல் கடிதம், பறிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். இந்த அடிப்படையிலே நான் நம்முடைய தமிழக அரசுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க கடமைப்பட்டிருக்கின்றேன். இது ஒட்டுமொத்தமாக பலதரப்பட்ட தமிழக மக்களின் உணர்வாக இருக்கிறது. இந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற தமிழக சிறைச்சாலைகளிலே இருக்கக்கூடிய பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், நளினி உள்ளிட்ட 7 தமிழர்கள். அதேபோன்று எஸ்.எல்.இ. என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அபுதாஹிர் உள்ளிட்ட சுமார் 50 முஸ்லிம் ஆயுள்தண்டனை கைதிகளை, முன்னாள் முதலமைச்சர் அஇஅதிமுகவின் நிறுவனர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய இந்த நூற்றாண்டிலே, இந்த 161-வது பிரிவை பயன்படுத்தி, தமிழக அரசு விடுதலை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

Leave a Reply