ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2605 Views
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
sterlite copper
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தூத்துக்குடியில் வாழும் மக்களுக்கு பெரும் சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வந்த வேதாந்தாவின் தாமிர உருக்காலை என்ற ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் மூடியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவைத் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. அக்குழு இன்று தாக்கல் செய்த அறிக்கையில் முன்னறிவிப்பின்றி ஆலையை முடியது நியாயமில்லை எனத் தெரிவித்து அந்த ஆலையைத் திறக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்த ஆய்வுக்குக் குழுவின் பரிந்துரையால் இந்த நாசகரமான ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் தூத்துக்குடி மக்களிடையே அதிகரித்துள்ளது.
தமிழக அரசிடம் பல்வேறு பாதுகாப்பு ரீதியான முன் அனுமதிகள் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கிய வந்த ஆலையான ஸ்டெர்லைட் ஆலை, மக்களுக்கும் மண்ணுக்கும் மிகப் பெரும் கேட்டை விளைவித்து வந்ததால் நிரந்தரமாக மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் 13 உயிர்களைப் பலிகொடுத்த பின்பு தான் தமிழக அரசு அந்த நாசகர ஆலையை மூடியது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றங்களை நாடினால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றித் தருவோம் என வாக்குறுதி அளித்து மீண்டும் நாசகர ஆலையைத் திறக்க வாய்ப்புள்ளது எனவும்,  ஸ்டெர்லைட் ஆலை மூடல் என்ற அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் இந்த அரசாணையை ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி அன்றே கூறியிருந்தது. அன்றே தமிழக அரசு தாமிர உருக்காலையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து ஸ்டார்லைட் ஆலையை மூட உத்தரவிட்டிருந்தால் நீதிமன்றங்கள் அந்த முடிவில் தலையிட்டிருக்க முடியாது.
எனவே தூத்துக்குடி மக்களின் அரும்பெரும் தியாகம் மதிக்கப்பட வேண்டுமென்றால், தூத்துக்குடியைக் காப்பாற்ற வேண்டுமெனில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழகத்தில் தாமிர உருக்காலைக்கு அனுமதியில்லை என அமைச்சரவை உடனே கூடி தமிழக அரசு கொள்கை முடிவு (Policy Decision) எடுத்து தீர்மானம் நிறைவேற்றி அதனை வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் சட்டமாக நிறைவேற்ற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply