வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை!

1681 Views
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து:
தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தலைக் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும்.
நடைபெற்று வரக்கூடிய 17வது நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை ஒருதலைப்பட்சமான முறையில் உள்ளதென பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரப்புரை முடிவடைந்த நிலையில் வேலூர்  நாடாளுமன்றத் தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் சம்பவம் வெளிப்படையாக நடந்து வருகிறது. ஆனால் அதுபற்றி நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், திமுக இந்த தேர்தலில் வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கத்தில் ஏற்கெனவே திமுக பொருளாளர் திரு. துரைமுருகன் வீட்டில் சோதனைகளை நடத்தி அந்த சோதனைகள் நடைபெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இன்றுவரை அமைதியாக இருந்த தேர்தல் ஆணையம், பரப்புரை ஓய்ந்த பிறகு தேர்தல் ரத்து என அறிவித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. தேர்தல் ஆணையத்தின் கடைசி நேர அறிவிப்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் குறிப்பாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக அமோக வெற்றி பெறும் என்ற சூழல் உருவாகி உள்ளதன் காரணமாகவே இந்த தேர்தலைத் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் மூலம் ரத்து செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் தொடர் ஒருதலைப்பட்ச நடவடிக்கையால் நாட்டு மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் இருந்த நம்பிக்கை குறைந்துள்ளது என்பதுதான் எதார்த்தமான உண்மை.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply