201 Views
வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம்!
மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை: வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனைமுடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக முதலமைச்சருக்குமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
“வெளிநாடுகளிலிருந்து, வந்தேபாரத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குத் திரும்பி வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை (Covid Negative test) எடுத்து வரவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையின் மூலம், தங்களது வேலைகளை இழந்து வாழ்வாதாரமின்றி தாயகம் திரும்பும் தமிழர்கள் மீது பெரும் பொருளாதாரச் சுமையை தமிழக அரசு சுமத்தியிருக்கிறது.
தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிந்த பல தமிழர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். சிலர் உணவுக்கும்; தங்குமிடத்திற்கும் நண்பர்கள் அல்லது தன்னார்வலர்களை எதிர்நோக்கும் சூழலில், தாயகம் திரும்புவதற்குக் கூட விமானக் கட்டணம் செலுத்த முடியாமல் அல்லல்பட்டு வரும் நிலையில் கொரோனா பரிசோதனை எடுப்பதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8000 செலுத்த வேண்டியுள்ளது. கடந்த மாதங்களில் ஊதியம் இல்லாமல் வேதனைக்குள்ளான தமிழர்கள் இத்தொகையினை செலுத்த இயலாமல் தவித்து வருகின்றனர் உதாரணத்திற்கு, கடந்த அக்டோபர் 3 அன்று மஸ்கட்டிலிருந்து திருச்சிக்கு பயணம் செய்யத் தயாராக இருந்த 10 தமிழர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாத காரணத்தால், இறுதி நேரத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா அலுவலர்கள் திருச்சி வட்டாட்சியரிடம் தொடர்பு கொண்டு அனுமதி கேட்ட பொழுது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இத்தடை தமிழகப் பயணிகளுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகமல்லாத வேற்று மாநிலங்களுக்கான விமானங்களில் இத்தடை இல்லை என்பதும்; அவ்விமானங்களில் கூட தமிழர்கள் (தமிழக வசிப்பிடத்தை கடவுச்சீட்டில் பதிந்துள்ளவர்கள்) பயணிக்கத் தடை விதிக்கப்படுகின்றனர் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் மட்டுமே இப்படி ஒரு விதியை சுமத்தியிருப்பது வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு பேரபத்தமாகும்.
எனவே, தமிழகம் திரும்பும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்கள் நலனில் அக்கறைக் கொண்டு தமிழக அரசு உடனே இதனை செயல்படுத்த வேண்டும் என தங்களை கேட்டுக்கொள்கிறேன்.” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படிக்கு
மாயவரம் ஜெ. அமீன்
தலைமை நிலையச் செயலாளர்