விளைநிலங்களைப் பாதிக்கும் உயர் மின் கோபுர திட்டத்தைக் கைவிட வேண்டும்!

2339 Views
விளைநிலங்களைப் பாதிக்கும் உயர் மின் கோபுர திட்டத்தைக் கைவிட வேண்டும்!
tamilnadu farmers
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 தமிழ்நாட்டில்  மொத்தம்  உயர் அழுத்த மின் பாதைகள் உயர் மின் கோபுரம் மூலம் 2,024 கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிதாக அமைக்கப்பட இருக்கின்றன. இப்பணிகள் நிறைவடையும் போது இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் உயர் மின் அழுத்தக் கம்பிகளால் பாகற்காய்க்குப் பந்தல் அமைத்தது போல் ஆகப்போகிறது.
மத்திய அரசின் ‘பவர்கிரிட் கார்ப்பரேஷ’னும் தமிழக மின்சார வாரியமும் இணைந்து இந்தப் பணிகளை நிறைவேற்றி வருகின்றன. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் உள்ள புகழூரில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின் பாதைகள் மூலம் மின்சாரம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கர்நாடகம், கேரள மாநிலங்களுக்கும், ஆந்திரம் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் கொண்டு செல்லப்படவிருக்கிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் உட்பட 16 மாவட்டங்கள் வழியாக இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாய நிலம் மட்டுமே விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரம். இதுபோன்ற உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களுக்குள் அமைக்கப்பட்டால் விவசாயம் முற்றிலும் பாதிப்பிற்குள்ளாகும்.
எந்தவொரு திட்டத்துக்கு நிலம் எடுப்பதாக இருந்தாலும், பயன்படுத்திக் கொள்ளும் உரிமையாக இருந்தாலும் யாருடைய நிலம், பரப்பளவு, சர்வே எண், அதற்கான இழப்பீடு எவ்வளவு போன்ற விவரங்களை அரசு வெளியிடுவதுதான் நடைமுறை. ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் இத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லை.
இது விவசாயிகள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப்போல, அரசின் எந்தவொரு திட்டத்துக்கு நிலம் தேவைப்பட்டாலும் நிலத்தின் உரிமையாளரிடம் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தி அவர்களின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தேவைப்படும் நிலம் குறித்து கருத்துக்கேட்புக் கூட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்தவில்லை.
நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் சட்டம் 2013ன்படி அரசினுடைய திட்டங்களுக்கு நிலம் எடுப்பதாக இருந்தால் 70 சதவீத விவசாயிகளிடம், எழுத்துப்பூர்வமான ஒப்புதலைப் பெறவேண்டும். தனியார் திட்டங்களுக்கு நிலம் எடுத்தால் 80 சதவீத விவசாயிகளிடம் எழுத்துப்பூர்வமான ஒப்புதலைப் பெறவேண்டும்.
இதுபோன்ற அனைத்து நெறிமுறைகளையும் மீறி விளைநிலங்களையும், விவசாயத்தையும் பெரிதும் பாதிக்கும் இதுபோன்ற உயர் மின்கோபுரம் அமைப்பதை உடனடியாகக் கைவிட்டு கேரளாவில் நடைமுறையில் இருப்பது போல் புதைவழியாக இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவை அளிப்பதுடன் நீதிக்கான இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் பங்கு கொள்ளும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply