வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

1169 Views

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.

வளைகுடா நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ள காரணத்தால் அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து வகையான நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளர்கள் அவர்கள் தங்கும் தங்கும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளார்கள்.

முழு ஊரடங்கு உத்தரவால் வேலையை இழந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை உடனே திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென வளைகுடா நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. உடனே திரும்ப அழைக்காத நாடுகளிலிருந்து எதிர்காலங்களில் தொழிலாளர்களை பணி நியமனம் செய்யும் போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என ஐக்கிய அரசு அமீரகம் எச்சரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் தினமும் 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், இதுவரை 4462 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டு 59 பேர் மரணமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. அதேபோல் மொத்த வளைகுடா நாடுகளில் 14100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 96 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

இது தொடர்ந்தால் ஒரு வார காலத்தில் வளைகுடா நாடுகளில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப் படுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பஹ்ரைன் நாட்டில் கடந்த ஞாயிறன்று கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 47 பேரில் 45 பேர் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என அந்நாடு தெரிவித்துள்ளது.

எனவே, வளைகுடா நாடுகளில்  குறிப்பாக ஐக்கிய அரசு அமீரகத்தில் வேலை இல்லாமலும், உணவு இல்லாமலும் தவித்து வாடும் இந்திய தொழிலாளர்களை உடனே நாட்டிற்கு அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனப் போக்கை கடைபிடித்தால், வளைகுடாவில் வாழும் இந்திய தொழிலாளர்கள் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உயிரிழக்க நேரிடும் என்பதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்

Leave a Reply