வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்!

1573 Views
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்!
tmmk
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 ‘வர்தா’ புயல் கடந்த 12-ம் தேதி அன்று சென்னையில் கரையைக் கடந்த போது வீசிய சூறாவளிக் காற்றினால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின்சார சேவை பெரிதளவில் பாதிக்கப்பட்டது. புயலின் காரணமாக உயிரிழந்த அனைவருடைய குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூபாய் ஐந்து லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வீடுகளையும், பயிர்களையும் இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
புயலாலும் மழையின் காரணமாகவும் தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலை உருவாகும் என்பதால், அதனை முன்கூட்டியே தடுக்கின்ற முயற்சியில் அரசும், மாநகராட்சியும் உடனடியாக தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைக்கவும், குடிநீர், பால் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கூடுதல் விலைக்கு பால் முதலிய அத்தியாவசிய பொருட்களை அநியாய விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்கவும் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வர்தா புயலால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழிந்துள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரின் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த இக்கட்டான சூழலில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து குறைந்த பட்சம் ரூபாய் பத்தாயிரம் கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply