வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 115 படகுகளை விடுவிக்க வேண்டும்!

1897 Views
வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 115 படகுகளை விடுவிக்க வேண்டும்!
6
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
டெல்லியில் தமிழக மீனவர்களின் பிரச்சனைக் குறித்து இந்திய-இலங்கை அமைச்சர்கள் முன்னிலையில் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழக மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழக மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்போம் என்று நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
பாம்பனில் 2014 ஜனவரி மாதம் பாஜக நடத்திய கடல் தாமரைப் போராட்டத்தின் போது அப்போதைய பா.ஜ.க நாடாளுமன்றக் குழு தலைவரும்  தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் ”மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்வளத் துறை அமைச்சகம் உருவாக்கப்படும், கச்சத் தீவு மீட்கப்படும், மீனவப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்”, என வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து 2014 ஏப்ரலில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திரு. நரேந்திர மோடி அவர்கள், “தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தொழில்நுட்ப முறையில் நடவடிக்கை எடுப்போம். கடலில் மீன்கள் எங்கு அதிகம் கிடைக்கும்? நமது எல்லை எங்கு முடிகிறது? என்பன பற்றிய விவரங்களை மீனவர்கள் அறிய வழிவகுக்கப்படும். குறிப்பாக, மீனவர்களுக்கு செல்போன் மூலம் உரிய தகவல்களைத் தரமுடியும். அதன்மூலம் ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மீனவர்களுக்கு மாற்றுத் தொழில்கள் அறிமுகப்படுத்துவோம்” என்றெல்லாம் அறிவித்தார்.
திரு.நரேந்திர மோடியின் ஆட்சிக் காலம் பாதியளவு முடிவடைந்த போதினும் மீனவர்களுக்கு அளித்த இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் டெல்லியில் நடைபெற்று முடிந்த இந்திய-இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் மீனவர்களிடையேயான பேச்சு வார்த்தைகளில் இலங்கை அரசுக்கு சாதகமாக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு முடிவுகளை அறிவித்துள்ளது. இது தமிழக மீனவ அமைப்புகளிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில்  நடைபெற்ற மீனவர் பேச்சுவார்த்தையின் போது இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா பேசும்போது “தமிழக மீனவர்களைக் கைது செய்யும் எங்கள் நடவடிக்கை தொடரும்” என்றும் அறிவித்திருப்பது மத்திய அரசின் கையாலாகாத்தனத்தைத் தான் காட்டுகிறது. ஒவ்வொரு முறை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் போதும் அவர்களை விடுதலை செய்வதற்காக பா.ஜ.க தலைமையிலான மத்திய அமைச்சர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைதான் உள்ளது.
 கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 115 படகுகளை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்குள் விடுவிக்கப்படவில்லை என்றால் படகுகள் அனைத்தும் பழுதாகிவிடும். படகுகளின் மரக்கட்டைகள் கூட மிஞ்சாது.
 எனவே, தமிழக மீனவர்களின் 115 படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மேலும் மத்திய அரசு தனது மீனவர் விரோதப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply