மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

2678 Views
மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
mekedatu project
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் கனகபுரம் மற்றும் மேகதாது பகுதியில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கான முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
கர்நாடக அரசு தயாரித்துள்ள திட்டத்தின்படி மேகதாது அணை முதல்கட்டமாக 2,000 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் கட்டப்படவுள்ளது. மேகதாது அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை குடிநீர் தேவைக்காக மட்டுமின்றி பாசனத் தேவைகளுக்காகவும் சேர்த்தே கட்டப்படுகிறது என்பது அந்த திட்ட அறிக்கை மூலம் தெரியவருகிறது.
மாநிலங்களிடையே பாயும் காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கர்நாடகம் அதன்படி கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பதும், அதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முதல் கட்ட அனுமதி  வழங்கியிருப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும்.
ஏற்கெனவே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கர்நாடக அணைகளில் சேர்ந்த நீரில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான தண்ணீரை கர்நாடகமே பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தஞ்சை விவசாய பகுதிகளில் மழைப்பொய்த்த காலங்களில் குறுவை, சம்பா ஆகிய இருபோக பயிர்களும் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் 100க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் மரணமடைந்துள்ளனர்.
தமிழக அரசு இனியும் இதுவிஷயம் குறித்து மெத்தனமாக இருக்காமல் உடனடியாக மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply