முஸ்லிம்கள், தலித்கள் மீது பசுவின் பெயரால் கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தால் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்! மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை!!

2310 Views

முஸ்லிம்கள், தலித்கள் மீது பசுவின் பெயரால் கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தால் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்!

மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை!!

Graphic1

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் புலால் உண்ணாத பசுவின் பெயரில் மனிதர்களை வேட்டையாடுவது அன்றாட நிகழ்வாக மாறிவருகின்றது.

பாஜக ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மண்டாசவ்ர் ரயில் நிலையத்தில் வைத்து பசு இறைச்சி வைத்திருந்தார்கள் என்ற பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் இரண்டு முஸ்லிம் பெண்கள் காவல் துறையினர் முன்னிலையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள்.

சல்மா இஸ்மாயில் மேவட்டி (வயது 30) மற்றும் ஷமீம் அக்தார் ஹீசைன் (வயது 35) ஆகிய இந்த இரண்டு முஸ்லிம் பெண்களும் மண்டாசவ்ரில் உள்ள கான்பூரா பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வைத்திருந்தது எருமை மாட்டு இறைச்சி தான் என்று அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் தெரிவித்திருந்த போதினும் இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர்கள் மீது தாக்குதல் நடத்திய சங்பரிவார் பெண் குண்டர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் எருமை மாட்டை அறுப்பதும் அதன் இறைச்சியை எடுத்துச் செல்வதும் தடை செய்யப்படவில்லை. இருப்பினும் ஜவோரா என்ற ஊரிலிருந்து திரும்பி வந்து ரயிலிருந்து இறங்கிய உடன் முதலாவது நடைமேடையிலும் அதன் பிறகு ரயில் நிலையத்திற்கு வெளியிலும் வைத்து சங் பரிவார் பெண் குண்டர்களால் இவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் மோடியின் ஆட்சியில் இந்தியா சாதனைப் புரிந்து வருகின்றது. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக மாட்டிறைச்சி ஏற்றுமதியை செய்பவர்களும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் தொடர்ச்சியாக பசுவின் இறைச்சியை வைத்திருந்தார்கள் அல்லது செத்த பசுவின் தோலை உரித்தார்கள் என்ற பெயரில் பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களும் தலித்களும் கொலைச் செய்யப்படுவது அல்லது கொலை வெறித் தாக்குதலுக்கு இலக்காகுவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.

இன்று நாடாளுமன்றத்தில், மத்தியப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்டது குறித்து மிகப் பெரும் அளவில் பிரச்சினையை எழுப்பியுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதியைப் பாராட்டுகிறோம். தொடர்ந்து பசுவின் பெயரால் மனிதர்களைக் கொல்லும் பாஜக மற்றும் அதன் தோழமை அமைப்புகளை வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்த அநியாய கொலைபாதகச் செயல்கள் தொடருமேயானால் நாடு முழுவதும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டங்களை தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து நடத்துவோம் என்று மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கின்றது.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply