முத்தலாக்-மத்திய அரசின் அவசர சட்டம்: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!

2489 Views
முத்தலாக்-மத்திய அரசின் அவசர சட்டம்:
மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!
triple-talaq-poster
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
மூர்க்கத்தனமான உள்நோக்கத்தோடு மோடி அரசு பிறப்பித்துள்ள முத்தலாக் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
நாடாளுமன்ற அவைகளான மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளுமே இணைந்த அமைப்புகள் மூலம் தான் முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் இந்த முத்தலாக் விஷயத்தில் மாநிலங்களவையில் பாஜக அரசால் வெற்றிபெற இயலாத சூழலில் தன்னிச்சையாக அமைச்சரையைக் கூட்டி இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஏற்கெனவே 2017ல் உச்சநீதிமன்றம் இதுபோன்ற அவசர சட்டங்களைப் பிறப்பிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு இழைக்கும் துரோகம் என்றும் அவசர  சட்டங்கள் நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு இணையாக முடியாது என்று குறிப்பிட்டுள்ளதையும் புறக்கணித்து மோடி அரசு இந்த அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கை ஆகும்.
முத்தலாக் என்ற பெயரில் முஸ்லிம் பெண்கள் மீது தனக்கு கரிசனம் உள்ளது என்ற கயமை நாடகம் ஆடி, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அவசரக் கோலத்தில் மக்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்றி தற்போது அதற்கு அமைச்சரவை மூலம் ஒப்புதல் பெற்றுள்ளது.
உரிமையியல் தொடர்பான பிரச்னையைக் குற்றவியல் சட்டமாக மாற்றும் இந்த அவசர சட்டம் முஸ்லிம்களை பழிவாங்குவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தலாக்-இ-பாயின் என்ற  ஒருமுறை சொல்லப்படும் மண முறிவை  தடை செய்யவில்லை.  ஆனால் இச்சட்ட முன்வடிவின் பிரிவு 2(பி) மற்றும் பிரிவு 3ஐ சேர்த்து படிக்கும் போது தலாக்-இ-பாயின் கூட செல்லத்தக்கது அல்ல என்றும் அது சட்டவிரோதம் என்றும் ஆகும் வகையில் உள்ளது. ஏனெனில் “இது போன்ற வடிவில் உடனடியாகவும் மீட்க இயலாத முறையிலும் உள்ள தலாக்” என்ற சொற்றொடர் உச்சநீதிமன்றம் தடை செய்யாத தலாக்&இ&பாயினிற்குப் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட முன்வடிவின் விளைவுகள் பொதுவாக அனைத்து முஸ்லிம் பெண்களின் நலன்களுக்கு முரணாக உள்ளது. மேலும் விவாகரத்துப் பெற்ற பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் இருப்பதுடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் பொதுவாக முஸ்லிம்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாலும், முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இருப்பதாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 25ம் பிரிவு அளித்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும் மோடி அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசரச் சட்டம் முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு நேர் எதிரான, முஸ்லிம் பெண்களின் குழப்பங்களையும் கவலைகளையும் சிரமங்களையும் அதிகப்படுத்துகின்ற சட்டம் ஆகும். மேலும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் வெளிப்படையான தலையீடாகத்தான் இந்தச் சட்டம் இருக்கின்றது.
அதிக அளவில் முஸ்லிம்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இச்சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலையீடு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு நேர் எதிரானதாகவும் அமைந்துள்ளது.
எனவே, மத்திய அரசு சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறவேண்டும் எனவும், இல்லையேல் இந்த அவரச சட்டம் ரத்து செய்யப்படும் வரை ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மக்களைத் திரட்டி தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி பேராராடும் என்பதை மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply