முத்தலாக் சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும்: பாஜக, சிவசேனா அல்லாத கட்சித் தலைவர்களுக்கு மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!

2238 Views
முத்தலாக் சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும்: பாஜக, சிவசேனா அல்லாத கட்சித் தலைவர்களுக்கு மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!
jawahirullah
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாஜக, சிவசேனை தவிர அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்:
“நாடாளுமன்றத்தின் மக்களவையில் நாளை டிசம்பர் 27 அன்று முத்தலாக் சட்டம் தொடர்பான மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மதச்சார்பற்ற கட்சிகள் வலுவாக எதிர்க்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையை சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கியது. இச்சூழலில் முத்தலாக் முறையால் திருமண பந்தம் முறியாது என்ற நிலையில் அதனைக் குற்றவியல் தொடர்பான செயல் என்று சட்டமியற்றுவது நகைப்பிற்குரியது.
முஸ்லிம் பெண்கள் மீதமான அக்கரையை விட முஸ்லிம் சமூகத்தை பழிவாங்கும் நோக்கத்தில் தான் மோடி அரசு முத்தலாக் என்று அழைக்கப்படும் ‘முஸ்லிம் பெண்கள் (திருமணம் தொடர்பான உரிமைகள்) மசோதா 2018’ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயலுகின்றது. சென்ற ஆண்டு இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற இயலாமல் அது நிலுவையில் உள்ளது. இச்சூழலில் நாடாளுமன்ற மரபுகளை மீறி இம்மசோதாவை அவசர சட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்தது. தற்போது அந்த அவரசச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற மத்திய அரசு முயலுகிறது.
மோடி அரசு கொண்டு வந்துள்ள இம்மசோதாவில் முத்தலாக் சொல்லும் கணவன் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் என்பது உரிமையியல் (சிவில்) தொடர்பான ஒரு நிகழ்வு. இதனைக் குற்றவியலாக மாற்றியிருப்பது சட்டநெறிமுறைகளுக்கு முரணானது.
இந்திய தண்டனைச் சட்டம் பின்வரும் குற்றங்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்று குறிப்பிடுகின்றது.
-அபாயகரமான ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுவது (இதச 148)
-சமூகங்களுக்கிடையே பகைமையை வளர்த்தல் (இதச 153ஏ)
-நாணயங்களை கள்ளத்தனமாக தயாரிக்கும் கருவியை உற்பத்தி செய்வது அல்லது விற்பனை செய்வது (இதச 233)
-கள்ள நாணயங்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வது (இதச 237)
-எந்த ஒரு வகுப்பாருடைய மத அல்லது மத நம்பிக்கையை வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் புண்படுத்துதல் (இதச 295ஏ)
இந்தக் கொடிய குற்றங்களை ஒரு கணவன் தனது மனைவியை முத்தலாக் முறையில் விவாகரத்து அளிப்பதுடன் சமப்படுத்துவது எப்படி நியாயமாகும்?
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பின்வரும் குற்றங்களுக்கு இரண்டாண்டு தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கின்றது:
-அசட்டையான மற்றும் கவனமின்மை செயலினால் ஏற்படும் மரணம்-கவனக் குறைவினால் இறத்தல் (இதச 304 கி)
-கலவரத்தில் ஈடுபடுதல் (இதச 147)
-எந்த ஒரு வகுப்பாரின் மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை தாக்குதல் அல்லது பாழ்படுத்துதல் (இதச 295)
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பின்வரும் குற்றங்களுக்கு ஓராண்டு தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கின்றது
-லஞ்சம் (இதச 171 ஈ)
இந்திய தண்டனைச் சட்டத்தின் படி பின்வரும் குற்றங்களுக்கு ஆறு மாதம் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கின்றது
-உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை கவனமில்லா நடவடிக்கை மூலம் பரப்புதல் (இதச 269)
-விற்பனைக்குரிய உணவு அல்லது பானத்தில் கலப்படம் செய்தல் (இதச 272)
-அபாயகரமான பொருள்கள் தொடர்பான கவனக்குறைவான நடவடிக்கை (இதச 284)
-பிறர் உயிர் அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் காயம் ஏற்படுத்துவது (இதச 337)
இந்தக் கொடிய குற்றங்களை விட தனது மனைவியை மூன்று மாத இடைவெளிக் காலத்திற்கு பதிலாக ஒரே தருணத்தில் விவாகரத்து செய்யும் ஒரு முஸ்லிம் கணவன் கொடிய குற்றத்தை இழைக்கவில்லை.
முத்தலாக் முறையில் விவாகரத்து செய்பவருக்கு மூன்று ஆண்டு தண்டனை என்பது வரம்புமீறிய, அறிவிற்கு பொருந்தாத தண்டனையாகும்.
முஸ்லிம்களை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மோடி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முத்தலாக் மசோதா, அரசமைப்புச் சட்டத்தின் 14ஆம் பிரிவிற்கு எதிராக அமைந்துள்ளது.
குற்றத்தின் தன்மைக்கு பொருந்தாத மிதமிஞ்சிய தண்டனை அளிக்கப்பட்டதால் தான் உச்சநீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ஐ ரத்து செய்தது.
மரபுகளை மீறி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் பரிசீலனையில் இருந்த ஒரு மசோதாவை அவசர சட்டமாக இயற்றி, சிறுபான்மை மக்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் சட்டத்தை உங்கள் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீவிரமாக எதிர்ப்பதுடன் அதற்கு எதிராக வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply