மாநில அதிகாரங்களைப் பறிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் ! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2447 Views
மாநில அதிகாரங்களைப் பறிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் !
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
anai
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கடந்த 13ஆம் தேதி அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அணை பாதுகாப்பு மசோதா மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் மசோதாவாகவே இருக்கிறது.
தற்போதுள்ளபடி ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே பாயும் நதியின் மீது கட்டப்படும் அணைகள், நீர்த்தேக்கங்கள் முழுவதுமாக அந்த மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது. அதுபோன்றே அணைகளும் நீர்த்தேக்கங்களும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே சொந்தமாக்கப்பட்டு, அவற்றின் செயல்பாடு, பராமரிப்பு அனைத்தும் அந்தந்த மாநில அரசிடமே இருக்கும். ஆனால் தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் இந்த அணை பாதுகாப்பு மசோதா மேற்குறிப்பிட்டுள்ள மாநில அரசின் உரிமை மற்றும் அதிகாரங்களைப் பறித்து, மாநிலத்தின் சுயாட்சிக்கு எதிராக உள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே, பொதுப்பணித் துறையில் அணை பாதுகாப்புக் குழு செயல்பட்டு வரும் நிலையில் மாநில அரசுக்குச் சொந்தமான அணைகளின் பாதுகாப்பு, கட்டுப்பாடு, இயக்கம், பராமரிப்பு ஆகியவற்றில் மத்திய அரசு, அணை பாதுகாப்பு என்ற பெயரில் தலையீடு தேவையற்றது.
இந்த மசோதாவில் தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு ஆட்சேபனைகள் இருக்கின்ற போதினும், மாநில அரசின் கருத்தைக்கூட கேட்காமல் இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
எனவே, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மாநிலங்களின் உரிமைகளை  பெரிதாகப் பாதிக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply