மாணவி அஸ்வினி படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1798 Views
மாணவி அஸ்வினி படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
aswini
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவி அஸ்வினியை கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் போது அழகேசன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கொடூரக் கொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அஸ்வினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபகாலமாகவே தமிழகத்தின் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இதுபோன்ற கொலை சம்பவம் பெண்களை படிக்க அல்லது வேலைக்கு அனுப்புகின்ற குடும்பத்தினரை மிகுந்த வேதனைக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் கொலை மற்றும் கொலைவெறி தாக்குதல்களை அரங்கேற்றுவதுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ற மனோபாவம் அதிகரித்து வருவது என்பது மனித சமூகத்திற்கு ஆபத்தான ஒன்று.
சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பரப்பப்பட்டு வரும் வக்கிர உணர்வைத் தூண்டும் நிகழ்ச்சிகளும் இதுபோன்ற கொடூர சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
தனக்குக் கிடைக்காத ஒன்று இவ்வுலகில் வாழத் தகுதியற்றது என்ற மனப்பான்மையை இளைஞர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமே தவிர, இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமாக செயல்களில் ஈட்டுப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
எனவே, தமிழக அரசுக் கல்வி மற்றும் வேலைகளுக்குச் செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக மனோதத்துவ  வகுப்புகளை நடத்த வேண்டுமென்றும், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு அவரவர் கடமை மற்றும் பொறுப்பை புரிய வைத்து அமைதியான சமூகமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply