மலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்: தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

1577 Views

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கடந்த பல நாட்களாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்ப சுமார் 500 இந்தியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 55 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் முடிவடைந்து விமானம் ஏறவிருந்த நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விமான நிலையத்திலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தவிர விமான நிலையத்திற்கு வந்து இந்தியாவிற்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் சுமார் 500 பேர் அருகிலுள்ள இடங்களில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மலேசியாவில் இருப்பதற்கான விசா முடிவடைந்தவர்களும் நாடு திரும்ப இயலாமல் துயரத்தில் உள்ளனர்.

மலேசியாவில் தவிக்கும் இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சரிடம் திமுக, காங்கிரஸ், இடதுசாரி மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இதுவரை மத்திய அரசு அவர்களை நாட்டிற்கு அழைத்துவர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோலாலம்பூரிலிருந்து இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசிய நாட்டவரை அழைத்துவர ஏர் ஏசியா விமானம் வரும் சூழல் அறிந்து அந்த விமானத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அனுப்புவதற்கு மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் எடுத்த முயற்சிகளுக்கும் மத்திய அரசு இணங்கவில்லை. இது வேதனைக்குரியதாக உள்ளது.

உடனடியாக மலேசியாவில் சிக்கித்  தவிக்கும் இந்தியர்களை நாட்டிற்குத் திரும்பி அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி 

Leave a Reply