மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

2525 Views
மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மத்திய அரசு:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
human rights
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
பீமா கோரேகான் போர் வெற்றியின் 200ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடச் சென்ற தலித்துகள் மீது இந்துத்துவ அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதல் நாடு தழுவிய அளவில் கடும் கண்டனங்களைப் பெற்றது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்த போராட்டங்களை பயங்கரவாத நடவடிக்கையாகச் சித்தரித்து அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய செயற்பாட்டாளர்களை மத்திய மற்றும் மகாராஷ்ட்ரா அரசுகள் ஒடுக்கி வருகின்றனர்.
அதேபோன்று பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கூறி மனிதஉரிமை ஆர்வலர்களை மத்திய அரசின் தூண்டுதலில் பேரில் மராட்டிய அரசு கைது செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக கவிஞர் வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ் கவுதம் நவ்லகா உள்ளிட்ட இடதுசாரி அமைப்பினரையும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும், வழக்கறிஞர்களையும், ஊடகவியலாளர்களையும்   மகாராஷ்ட்ரா காவல்துறை கைது செய்துள்ளது.

ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகவும், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பாதுகாப்புகளுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்களை பயங்கரவாதிகளைப் போன்று சித்தரித்து கைது செய்துள்ள மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்கி மறைமுகமாக எமர்ஜென்சி என்ற அவசரக்கால நிலையை அமல்படுத்தி வருவதாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
சமூகத்தில் நலித்த பிரிவினருக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகப் போராடும் மக்களைப் பயமுறுத்தவே மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
நாட்டை ஆளும் பாஜக அரசு, அனைத்துத் துறையிலும் தோல்வியைத் தழுவி அதற்கு எதிராக வரும் விமர்சனங்களை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் ஜனநாயகவாதிகள் மீது காவல்துறை மூலம் இதுபோன்ற அடக்குமுறையை ஏவிவருகிறது.
மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் கைதுதை கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு என்பது ஒரு பாதுகாப்பு சுவர் போன்றது, அதனை ஒடுக்க முயன்றால் அது வெடித்துவிடும் எனவும், கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்காவலில் மட்டுமே வைக்க வேண்டும் எனவும் ஆணையிட்டு மத்திய அரசின்  இந்த எத்தேச்சதிகார நடவடிக்கைக்குக் குட்டு வைத்துள்ளது.
எனவே, மத்திய பாஜக அரசும், அதற்கு ஆதரவாக உள்ள மாநில அரசுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இல்லையெனில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனித உரிமைக்காகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்காகவும் போராட்டங்களை மனிதநேய மக்கள் கட்சி முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply