மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள்

3026 Views
மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் திருச்சியில் 28.08.2018 அன்று தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
40284592_314250752666093_7525706150625411072_n
தீர்மானம் 1: கலைஞருக்கு இரங்கல்
தந்தை பெரியாரின் ஒளியிலும், அறிஞர் அண்ணாவின் வழியிலும் நின்று, ஆரிய சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சமூகநீதி அரசியலை வலிவோடும், பொலிவோடும் முன்னெடுத்து, அதன் ஓர் அங்கமாக தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளித்த முத்தமிழ் வித்தகர் திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தமுமுகவின் நன்றி அறிவிப்பு மாநாட்டில் அவர் பங்கேற்று ஆற்றிய உணர்வுப்பூர்வமான உரையையும், கழகத்திற்குத் தனது சொந்த நிதியிலிருந்து இரண்டு அவசர உதவி ஊர்திகளை அளித்து நமது சேவைகளை அங்கீகரித்ததையும் இச்செயற்குழு நன்றியோடு நினைவு கூர்கிறது. கலைஞர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர் மற்றும் திமுகவினர் அனைவருக்கும் இச்செயற்குழு நெஞ்சார்ந்த ஆறுதலையும் தெரிவிக்கிறது.
3
தீர்மானம் 2 : மாநிலச் செயலாளர் நாவலூர் மீரான் முகைதீன் அவர்களுக்கு இரங்கல்
தமுமுகவின் காஞ்சி மாவட்டத்தின் அடித்தளமாகவும், தூணாகவும் திகழ்ந்தவர் நாவலூர் மீரான் முகைதீன் அவர்கள். தூய பணிகளால் தொண்டர்களை ஈர்த்தவர். கழகத்திற்காகப் பல தியாகங்களைச் செய்தவர். அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் களமாடிய போராளி நமது பேரன்புக்குரிய மாநிலச் செயலாளர் நாவலூர் மீரான் முகைதீன் அவர்களின் மறைவுக்கு இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. அவரது நற்பணிகளை அல்லாஹ் அங்கீகரித்து மகத்தான மறுமை வாழ்வையும், உயர் சுவனத்தையும் வழங்கிட வேண்டும் என இச்செயற்குழு பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 3: குல்தீப் நய்யாருக்கு இரங்கல்
இந்தியாவின் மிக மூத்த இதழியலாளர், அண்டை நாடுகளுக்கிடையிலான நல்லுறவுக்குப் பாடுபட்டவர், அவசர நிலை காலத்து அடக்குமுறைகளை எதிர்த்து நின்றதால் சிறைக்குச் சென்றவர் எனப் பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான குல்தீப் நய்யாரின் மறைவுக்கு இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
தீர்மானம் 4 : திருச்சியில் அக்டோபர் 7ல் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக களம் கண்டு விடுதலைப் பெற்று தந்த தியாகிகளால் உருவாக்கப்பட்ட நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் நமது நாட்டின் பன்மை பண்பாடுகளை அங்கீகரித்து உருவாக்கப்பட்டது. பல்வேறு மத, மொழி, கலாச்சாரப் பண்பாடுகளைக் கவனத்தில் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் வகையில் நமது அரசமைப்புச் சட்டம் அமைந்துள்ளது.
ஆனால் ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி, ஒரே சட்டம் என்ற பெயரால் நாட்டின் பன்மைப் பண்பாடுகளை சீர்குலைக்கும் நாசகாரப் பணிகள் அதிவேகமாக நடந்தேறி ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நால்வர் நீதியியல் வரலாற்றில் முதன் முறையாக ஊடகங்களை சந்தித்து நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எச்சரிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவிப்பதும் சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பிவிட்டு மனுநீதியை அரசாள வைக்கும் நீட் போன்ற தேர்வுகளும் முஸ்லிம்களை அச்சுறுத்தி மேலும் ஒடுக்கிட பசு மாட்டின் பெயரால் நடத்தப்படும் கொடூரப் படுகொலைகளும் நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் மதசார்பின்மைக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியா ஒரு மதசார்பற்ற சமதர்ம ஜனநாயக குடியரசு என்பதை அழித்து புரட்சியாளர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட நமது அரசமைப்புச் சட்டத்தையே ஒழித்துக்கட்ட நடக்கும் சதியை முறியடித்து மக்களை விழித்துக்  கொள்ளச் செய்திட மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை ஓர் அணியில் திரட்டிட திருச்சியில் அக்டோபர் 7ல் மனிதநேய மக்கள் கட்சி அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டை நடத்த உள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், இந்தியாவின் உண்மையான இயல்புகளையும் பாதுகாப்பதற்கும், மதவாதத்தை வீழ்த்தி மனிதநேயத்தை எழுப்புவதற்கும், அனைத்து மக்களும் இம்மாநாட்டிற்கு பேராதரவு தரவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
அக்டோபர் 7, 2018 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு நடத்த வேண்டும் எனவும், இதற்கான பணிகளைக் கழகச் செயல்வீரர்கள் பட்டிதொட்டியெங்கும் முழுவீச்சுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5 : திருமுருகன் காந்தி கைதிற்கு கண்டனம்
மே 17 இயக்கப் பொறுப்பாளர் திருமுருகன் காந்தியை, ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் உரையாற்றித் திரும்பும் போது காவல்துறை கைது செய்திருப்பது அநாகரீகச் செயல். நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க மறுத்த பிறகும் வெவ்வேறு வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. குறிப்பாக சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) கீழ் அவரை தமிழகக் காவல்துறை கைது செய்திருப்பதை உச்சபட்ச மனிதஉரிமை மீறலாகவும், ஜனநாயகப் படுகொலையாகவும் இச்செயற்குழு கருதுகிறது.
நீதிமன்றம் சிறையிட மறுத்தவரை வேறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கும் காவல்துறை, உயர்நீதிமன்றம் வலியுறுத்திய பிறகும் எஸ்.வி.சேகரைக் கைது செய்யாததும், தமிழகத்தில் பதற்றத்தைத் தூண்டிவிடும் எச்.ராஜாவைக் கைது செய்யாததும் வெட்கக்கேடானது. தமிழகக் காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக திருமுருகன் காந்தியை விடுதலைச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு கோருகின்றது.
கேரளா மக்களுக்கு நிவாரண திரட்டிய மாணவி வளர்மதியை அராஜகமாக கைதுச் செய்ததை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 6 : நீர் மேலாண்மையில் அலட்சியப் போக்கிற்கு கண்டனம்
பெய்கின்ற பெருமழையின் பெரும்பகுதி மக்களுக்குப் பயனளிக்காமல் வீணாகக் கடலில் கலப்பது வேதனைக்குரியது. தமிழகத்தில் நீர்மேலாண்மையில் தொடர்ந்து காட்டப்பட்டு வரும் அலட்சியப் போக்கே இந்த அவலநிலைக்குக் காரணம். நீரின் தேவைமிக்க மாநிலத்தில் நீர்மேலாண்மை இல்லாமல் இருப்பது வெட்ககரமானது. மதகுகளை உடைக்கும் அளவுக்கு நீர் பெருக்கெடுத்தும் காவிரியின் கடைமடைப் பகுதி காய்ந்து கிடப்பது கவலைக்குரியது.
உபரியான நீரை சேமிப்பதற்கும், உரிய நேரத்தில் அதைப் பயன்படுத்துவதற்கும் ஆறுகளில் மணல் கொள்ளையைத் தடுப்பதற்கும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7 : கேரள மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம்
வரலாறு காணாத மழைவெள்ளப் பேரழிவுகளை சந்தித்து, சீர்குலைந்து நிற்கும் கேரளத்திற்கு உரிய நிவாரணமும் வழங்காமல், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிவாரணத்தையும் தடுக்கின்ற மத்திய அரசின் மனிதநேயமற்ற செயலை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மதவாதத்தை மூடிமறைத்து மத்திய அரசு மாற்றாந்தாய் மனோபாவத்தோடு கேரள மக்களை வஞ்சிப்பதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
துயறுற்ற கேரளா மக்களுக்கு ரூ2 கோடி அளவில் நிவாரண நிதியாகவும் பொருளாகவும் அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 8 : சமூகநீதிப் பாதுகாப்பு
தமிழகத்தின் சமூகநீதிப் பயணத்தில் மகத்தான வரலாற்று வெற்றியான 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மதவாத மத்திய அரசு ஆபத்தை உருவாக்க வாய்ப்புள்ள சூழலில், 69 சதவீத இடஒதுக்கீட்டை கண்ணுங் கருத்துமாகப் பாதுகாப்பதற்கு மாநில அரசு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது. 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்ட இடைக்கால வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தாலும், இதுதொடர்பான மூல வழக்கை நவம்பர் மாதம் விசாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
69 சதவீட இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் இடம்பெற்றுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் உள்ள ஒரு சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரிப்பது சரியல்ல என தமிழக அரசு வழக்கு தொடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9 : உள்ளாட்சி மன்றத் தேர்தல்
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழல் நிலவுகிறது. பல்வேறு சாக்கு போக்குகளைத் தெரிவித்து தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல்களை தள்ளிப் போடுவது ஜனநாயக விரோதச் செயலாகும். உடனடியாக தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கோருகின்றது.
தீர்மானம் 10 : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை
சுற்றுச்சூழலுக்கு பெரும் சீரழிவை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை கொல்லும் நோக்கத்தில் நடத்தப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிச் சூட்டை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த சட்டவிரோத துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கோருகின்றது.
ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தேசீய பசுமை தீர்ப்பாணையம் விசாரணைத் குழு அமைத்திருக்கும் சூழலில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுத்துவந்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக செயல்பட்ட திரு. நசிமுதீன் இ.அ.ப. அவர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டது சரியான நடவடிக்கை இல்லை. குறைந்தபட்சம் தேசீய தீர்ப்பாணையத்தின் விசாரணை முடியும் வரை திரு. நசிமுதீன் அவர்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராகத் தொடர தமிழக அரசு வழிவகுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 11 : திமுக புதிய தலைவருக்கு வாழ்த்து
திமுகவின் செயல் தலைவராக இருந்து, தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திராவிட இயக்கத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இச்செயற்குழு மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
திமுகவில் படிப்படியாக வளர்ந்து, கடுமையான உழைப்பின் மூலம் இந்த உயர்ந்த இடத்தை அடைந்துள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட இயக்கக் கோட்பாடுகளை மிகுந்த வீச்சோடு முன்னெடுத்து சமூக நீதியையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமய நல்லிணக்கத்தையும் பேணிக்காத்து பெரும் வரவேற்போடு செயலாற்ற இச்செயற்குழு மனமார வாழ்த்துகிறது.
திமுகவின் பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. துரைமுருகன் அவர்களுக்கும் இச்செயற்குழு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 12: வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை
பத்தாண்டுகளைக் கடந்து சிறையில் வாடும் சிறைவாசிகள் பலரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளதற்கு இந்த செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதேநேரத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்நாள் சிறைவாசிகளாக தமிழக சிறைகளில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் மட்டும் விடுதலை செய்யப்படாதது பெரும் அநீதி என இச்செயற்குழு கருதுகின்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் சிறைப்பட்டவர்கள், முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 13 : எட்டு வழிச்சாலை திட்டம்
சென்னை முதல் சேலம் வரை 8 வழிச் சாலை அமைப்பது விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. சென்னை முதல் சேலம் வரை ஏற்கெனவே முழுமையாக பயன்படுத்தப்படாத மூன்று நெடுஞ்சாலை இருக்கும் நிலையில் இந்த புதிய 8 வழிச்சாலை தேவையில்லாதது. மக்களுக்கு பயனில்லாமல் வேளாண்மையை அழிக்கும் சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 14 : தேசீய குடிமக்கள் ஆவணம்
தேசீய குடிமக்கள் ஆவணம் (NRC) என்ற பெயரில் அசாம் மாநிலத்தில் 40 லட்சத்திற்கும் மேலான மக்களின் குடியுரிமை பறிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவாக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. சொந்த நாட்டு மக்களை அகதிகளாக மாற்றும் ஒரு பெரும் சதித்திட்டமே தேசீய குடிமக்கள் ஆவணம் என இச்செயற்குழு கருதுகின்றது. இந்த நாசகர திட்டத்தை உடனே கைவிட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
Leave a Reply