மனிதநேய மக்கள் கட்சித் தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்வு!

3034 Views
மனிதநேய மக்கள் கட்சித் தலைவராக
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்வு!
stage 1 - Copy
மனிதநேய மக்கள் கட்சியில் அமைப்புத் தேர்தல் கடந்த 3 மாதங்களாக கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்று வந்தன. இதன் இறுதியில் சென்னையில் காமராசர் அரங்கில் மே 2 அன்று தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
31743707_1726912194096294_1748418131786727424_n
தமிழகம் முழுவதிலும் இருந்தும் 1251 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்குகொண்டார்கள். இந்தப் பொதுக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலாளராக ப. அப்துல் சமதும், பொருளாளராக கோவை இ.உமரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  இப்பொதுக்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரங்கல் தீர்மானம்
 
நீதியரசர் ராஜேந்தர் சச்சார், எழுத்தாளர் கவுரி லங்கேஷ், பசு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பெஹ்லு கான், ஜுனைத் கான் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி மேலான்மை வாரியம்
 
தமிழக மக்களின் உரிமைகளைப் புறந்தள்ளி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மூன்றாம் அணி தேவையற்றது
நாட்டில் மதச்சார்பின்மையையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் காப்பாற்ற எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஓர் அணியில் நிற்க வேண்டுமென்றும், மூன்றாம் அணி அமைப்பு தேவையில்லாத முயற்சி என்று இப்பொதுக்குழு கருதுகிறது.
நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்
 
நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் தவறானது என்றும் அது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணானது என இப்பொதுக்குழு கருதுகின்றது.
மின்னணு வாக்குப் பதிவு எந்திர முறை கைவிடப்பட வேண்டும்
மிகப்பெரிய முறைகேடுகளுக்கு வழிவகுக்கக்கூடிய, தேர்தல் முறை நடவடிக்கையையே போக்குகிற, முன்னேறிய நாடுகள் நிராகரித்துவிட்ட, மின்னணு வாக்குப் பதிவு எந்திர (EVM) முறையை தேர்தல் ஆணையம் முற்றிலுமாகக் கைவிட்டே தீரவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலேயே இனிவரும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என இப்பொதுக்குழு மிகவும் வலியுறுத்துகிறது.
பெண்களை இழிவு செய்வோர் மீது நடவடிக்கை
பொதுவாழ்வில் போற்றத்தக்க வகையில் பங்களிப்புகளைச் செய்து வரும் பெண்களை பாஜக தலைவர்கள் வரம்பு கடந்து அநாகரீகமாகவும் ஆபாசமாகவும் பேசி வருவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதழியல் துறையில் உள்ள பெண்கள் குறித்த பாஜக நடிகர் எஸ்.வி.சேகரின் இழிவான பதிவுக்கு வழக்குப் பதிவு செய்ததைப் போல திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கவிஞர் கனிமொழியை மிக இழிவாக விமர்சித்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துவதோடு, பொதுவாழ்வில் உள்ள பெண்களைப் பற்றிய அநாகரீகமான விமர்சனங்களை அனைவரும் தவிர்த்திட வேண்டும், பாஜகவில் உள்ள பெண் தலைவர்களைக் குறித்தும் இத்தகைய விமர்சனங்கள் செய்யப்படக் கூடாது என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
ஆளுநரைத் திரும்பப் பெறுதல்
மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் அவராகவே தலையிட்டு ஒரு நபர் ஆணையத்தை நியமித்துள்ளார். ஆளுநர் பதவிக்கு உரிய  மரபுகளை மதிக்காமலும்  விழுமியங்களை வீழ்த்தும் வகையிலும் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
வேளாண் மண்டலம் அமைத்தல்
காவிரிப் படுகை பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மரக்காணம் முதல் வேளாங்கன்னி வரை அந்நிய பெருநிறுவனங்களுக்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஏலம் விட்டுள்ள மத்திய அரசையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது.
நீட் தேர்வு ஒழிப்பு
கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைத் தகர்த்து தமிழகத்தின் கல்வி உரிமையைப் பறிக்கும் எதேச்சதிகார நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்
மத்திய  மாநில அரசுகளுக்குப் பொதுவான இசைவுப் பட்டியலில் (Concurrent List) கல்வி இருப்பதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
குட்கா விவகாரம்
தடைசெய்யப்பட்ட தீய போதைப் பொருட்களான பான்பராக், குட்கா ஆகியவற்றை சட்டவிரோதமாக மிகப்பெரிய அளவில் சந்தைப்படுத்திய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை இப்பொதுக்குழு  வரவேற்கிறது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலகி இந்த விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
வன்கொடுமைச் சட்டம்
தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பாதுகாப்புக் கேடயமாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் வகையில் அண்மையில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு குறித்து இப்பொதுக்குழு அதிருப்தியைப் பதிவு செய்கிறது. தலித்துகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் மேலும் வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
சாகர்மாலா திட்டம்
 
தமிழகக் கடற்பரப்புகளை நாசப்படுத்தி மீன்பிடித் தொழிலை அழித்து, கடலோரப் பகுதிகளை பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தைக் கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வுரிமையோடு விளையாடி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையம்
பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வோடும், கடல் வளத்தோடும் விளையாடுகிற, கூடங்குளம் அணு உலையின் அபாயங்களைச் சுற்றுச் சூழலியலாளர்கள்  தொடர்ந்து எச்சரித்தும் அதை அரசுகள் அலட்சியப்படுத்துவது வேதனைக்குரியது. கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டுமென இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
நியூட்ரினோ திட்டம்
நியூட்ரினோ திட்டம் சூழலியல் சீர்கேடுகள் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தக் கூடியவை. எனவே உடனடியாக இத்திட்டத்தை தமிழகத்தில் கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
மார்க் துறைமுகம்
காரைக்கால் நாகூர் எல்லையில் உள்ள மார்க் துறைமுகத்தின் நிலக்கரி இறக்குமதியும், ஏனைய நடவடிக்கைகளும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் சுகாதாரத்தையும் பெரிய அளவில் பாதித்து வருவதால் மார்க் துறைமுகத்தை உடனடியாக மூடவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
Leave a Reply