மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிமைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்சாரி தொடுத்த வழக்கு தள்ளுபடி!

2265 Views
மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிமைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்சாரி தொடுத்த வழக்கு தள்ளுபடி!
mmk-curt1mmk-curt2
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் என்று கூறிக்கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த அக்டோபர் 6, 2015 அன்று நடைபெற்ற தலைமை பொதுக்குழுவின் தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி தமிமுன் அன்சாரி என்பவர் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (25.02.2016) தள்ளுபடி செய்தது.
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் எம். தமீமுன் அன்சாரி. இவரது பதவிக் காலம் கடந்த 2015 ஜனவரி 28ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. கடந்த அக்டோபர் 6, 2015ல் சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைவராகவும், ப. அப்துல் சமது பொதுச்செயலாளராகவும், ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமீமுன் அன்சாரி ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்தார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லா முன்னாள் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி மற்றும் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். ஹைதர் அலி ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி 15 அன்று நீதியரசர் கே.கே. சசிதரன் முன்னிலையில் நடைபெற்றது. பிரதிவாதிகள் சார்பாக மூத்த வழக்குறைஞர்கள் அஜ்மல் கான், ஹேமா சம்பத், வி. ராகவாச்சாரி மற்றும் வழக்கறிஞர்கள் நிசார் அஹ்மது, நரேந்திரன், அகில் அக்பர் அலி, அஜிமத் பேகம் ஆகியோர் ஆஜரானார்கள். மனுதாரர் சார்பாக மூத்த வழக்குறைஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. பதவிக் காலம் முடிவடைந்து பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட தமீமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் இந்த வழக்கைத் தொடுக்க இயலாது என்றும், மனிதநேய மக்கள் கட்சிக்கு அவர் உரிமை கோர இயலாது என்ற நிலையில் அவரது வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இனி மனிதநேய மக்கள் கட்சியின் பெயரையோ கொடியையோ பயன்படுத்த தமீமுன் அன்சாரிக்கோ அவரின் ஆதரவாளர்களுக்கோ உரிமை இல்லை என்ற நிலை இத்தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ளது.

அன்புடன்
எம். ஹுசைன் கனி
தலைமை நிலையச் செயலாளர்

மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply