மனிதநேயம் ஓங்கட்டும்… மாச்சர்யங்கள் நீங்கட்டும்…

2130 Views
மனிதநேயம் ஓங்கட்டும்…
மாச்சர்யங்கள் நீங்கட்டும்…

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி:

இஸ்லாம் மார்க்கத்தின் இரு இனிய திருநாள்களில் ஒன்றான ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற லட்சியம் ஓர் அழகிய கனவாகவே தொடர்ந்து வரும் சூழலில், ஈகை என்ற இனிய பண்பை எல்லோரும் கொண்டாடுவதும், இல்லாத மக்களுக்கு நம்மால் இயன்றவை வழங்குவதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அடுத்த மாதமான ஷவ்வால் முதல் நாளில் கொண்டாடப்படும் ஈகைப் பெருநாளில், காலைப் பொழுதில் வாய்ப்பிருக்கும் இடத்தில் திடலிலும், இல்லாத இடத்தில் பள்ளிவாசல்களிலும் நிறைவேற்றப்படும் தொழுகையே ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்தத் தொழுகைக்கு வரும் முன்னர், ஃபித்ரா எனும் தர்மத்தைத் தகுதியுள்ள ஒவ்வொருவரும் நிறைவேற்றிய பிறகே இந்தத் தொழுகைக்கு வரவேண்டும். தர்மமாகிய ஃபித்ராவை நிறைவேற்றிய பிறகே தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதாகும். இந்த அளவு ஈகையை, இஸ்லாம் மார்க்கம் இறைக் கடமையாகவும், கொண்டாட்டத்திற்குரியதாகவும் ஆக்கியுள்ளது.

தொன்மை மிக்கத் தமிழின் அற இலக்கியங்கள், ஈகையை உச்சி மேல் வைத்து மெச்சிப் போற்றுகின்றன.

‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடமை
வைத்திழுக்கும் வன்கண வர்’

(பிறருக்கு உதவி மகிழும் இன்பத்தை உணராதவர்களே, தாம் சேர்த்த பொருளை வைத்து இழக்கும் வன்குணம் உடையவர்கள்)
என்றும் திருக்குறளில் ஈகை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் குறள்கள் சான்றாகும்.

இல்லாமை நீங்கிடவும், அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடவும் அனைவரும் பாடுபடுவோம். அனைத்து சமுதாய மக்களும் அன்பால் இணைந்து, அறிவால் உயர்ந்து நிற்பதே தமிழகத்தின் தனிச் சிறப்பு. இந்த நற்பண்பை நாடு முழுதும், ஏன் நானிலம் முழுதும் பரப்ப வேண்டிய கட்டாய காலத்தில் நாம் இருக்கிறோம்.

சிறுபான்மை மக்கள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் தாக்குதல்களால் நாம் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. பாசமெனும் வெள்ளத்தால், பகை நெருப்பை அணைத்த இஸ்லாம் மார்க்கத்தில் உறுதியோடு நின்று, தாய்நாட்டிற்கு அருந்தொண்டுகளைத் தொடர்வோம்.

அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply