மத்திய பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2340 Views
மத்திய பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
PARLIAMENTTS
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
மத்திய பாஜக அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்தும், துரோகம் இழைத்தும் வரும் மத்திய அரசை முடிவுக்குக் கொண்டுவர அதிமுக ஆதரவு அவசியமானது.
வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்தின் விவசாயத்தை ஒழித்து தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்டிரினோ போன்ற நாசகரமான திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்த அனுமதி அளித்தது,
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அதனைக் கிடப்பில் போட்டது,
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யப் பல மாதங்களைக் கடத்தி தற்போது இடத்தைத் தேர்வை செய்து எய்ம்ஸ் உருவாக்கத்திற்கு உரிய தொகையினை ஒதுக்காமல் இருப்பது,
உயர்கல்விக்கான யு.ஜி.சி. என்ற மானியக்குழுவை கலைத்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் உயர் கல்விக்கான புதிய அமைப்பை உருவாக்க முயற்சி,
அணை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் தமிழக அணைகளில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளைப் பறிப்பது,
 போன்ற தமிழக விரோத நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் ஆளுநரைத் தலையிடச் செய்து மாநில சுயாட்சியையும், ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் உரிமைகளையும் கேலிக்கூத்தாக்கியுள்ளது மத்திய பாஜக அரசு.
மத்தியில் ஒரு சர்வாதிகார ஆட்சியைப் போன்று ஆட்சி செய்துவரும் பாஜக நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மதநல்லிணக்கத்திற்கும் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பாஜக மற்றும் சங்பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர்.
மொத்தத்தில் பாஜகவின் இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை அதிமுக உணரவேண்டும்.
தமிழகம் மீண்டும் அனைத்துத் துறையிலும் முன்னேறவும், மாநிலத்தின் உரிமைக் காப்பாற்றப்படவும் பாஜக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply