மத்திய அரசு தமிழக மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறியதால் தான் புதிய சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது!

2369 Views
மத்திய அரசு தமிழக மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறியதால் தான் புதிய சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது!
22853133_1607139562676572_5539068324807528645_n
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இலங்கை அரசு, மீன்வளம் மற்றும் நீர்வள திருத்த மசோதாவை, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளது. அதில் எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.50 லட்சம் முதல் ரூ. 17.5 கோடி வரையிலும் (இலங்கை பணத்தில்) அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் குறிப்பாக, பாக்ஜலசந்தி பகுதியில் பாரம்பர்யமாக, பல நூற்றாண்டுகளாக மீன் பிடித்து வரும் தமிழக மீனவர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் வேட்பாளராகப் பங்கேற்று பேசிய நரேந்திர மோடி, மத்தியில் மீன்வளத்துறை அமைச்சகம் நிறுவப்படும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்ததும் அவர் நிறைவேற்றத் தவறிய முக்கிய வாக்குறுதிகளில் மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியும் ஒன்றாகும்.
குஜராத் மீனவர்கள் மீது சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, மத்திய அரசு அவர்கள் மீது காட்டிய அக்கறையை, தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொன்றபோது காட்டாமல் ஒருதலைப் பட்சமாகவும், மாற்றான்தாய் மனப்பான்மையுடனும் நடந்து கொண்டனர்.
மத்திய அரசு தமிழக மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி முற்றிலும் மாறான நிலைப்பாடை மேற்கொண்டு வந்ததால் தான் இந்தப் புதிய சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனிமேல் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்காக யார் அபராதம் கட்டப் போகிறார்கள்? இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை என்றால் இதற்கான வழக்குகளை இலங்கை நீதிமன்றத்தில் நடத்தப்போவது யார்? மத்திய அரசா அல்லது மாநில அரசா? என்ற கேள்விகள் மட்டுமே தற்போது மீனவர்களிடம் மிஞ்சி நிற்கின்றன.
இனிமேலாவது பிரதமர் நரேந்திர மோடி, கார்ப்பரேட்டுகள்  மீது காட்டும் அக்கறையில் சிறிதளவாவது அனுதினமும் செத்துப் பிழைக்கும்  தமிழக மீனவர்கள்  மீது காட்ட முன்வர வேண்டும்.
 அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply