மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்துகொள்ள வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1936 Views
மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்துகொள்ள வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை, வாக்கு எண்ணும் நேரத்தில் வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரத்தில் (VVPAT) உள்ள ஒப்புகை சீட்டுகளை 50 சதவீதம் சரிபார்க்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடி இருப்பது வரவேற்கத்தக்கது.
ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவின் போது சுமார் 30 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தும், ஒருசில பகுதியில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவின் சின்னத்திற்கு வாக்கு பதிவதையும் கண்டு வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்ததாகச் செய்திகள் வெளிவந்தன.
வாக்குப் பதிவு இயந்திரக் கோளாறு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் போதிய அக்கறைக் காட்டாத காரணத்தால் எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளன.
50 விழுக்காடு ஒப்புகைச் சீட்டை எண்ணுவதற்கு ஒரு வார காலம் எடுக்கும் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏற்புடையதல்ல. ஐந்தாண்டு காலம் ஆட்சிக்கு மக்கள் யாரை தேர்ந்தெத்டுள்ளார்கள் என்பதை சரியாக அறிந்துகொள்ள ஒரு வார காலம் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவது ஒன்றும் தவறில்லை.
ஜனநாயகத்தில் ஆணிவேராகத் திகழக்கூடிய தேர்தலை நடத்தக்கூடிய தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், மக்கள் நம்பிக்கைக்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டுமே தவிர அதற்கு மாற்றமாக நடந்து தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்கும் நடவடிக்கை ஈடுபடக்கூடாது.
நடைபெறவிருக்கும் அடுத்தடுத்த கட்ட வாக்குப் பதிவின் போது தேர்தல் ஆணையம் வெளிப்படையாக நடந்துகொண்டு, வாக்காளர்களின் உரிமையை நிலைநாட்டி,  பதிவாகும் மொத்த வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை இயந்திரத்தின் மூலம் சரிபார்த்து நாட்டில் ஜனநாயகத்தைச் செழிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply