போலி குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும்

2829 Views

.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முக்கிய குறிக்கோள் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதே, ஆனால் அரிசி, சர்க்கரை தவிர மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு வகைகள் அனைத்தும் குடும்ப அட்டைகளுக்குச் சரியாகக் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
புதிய குடும்ப அட்டைகள் 2005ல் வழங்கப்பட்டன. ஆனால் 2009ல் ஆண்டு திமுக ஆட்சியிலே திடீரென்று ஆய்வு செய்கின்றோம் என்ற பெயரிலே உண்மையான குடும்ப அட்டைகளெல்லாம் இரத்து செய்யப்பட்டு போலியான குடும்ப அட்டைகளையெல்லாம் உண்மையான குடும்ப அட்டைகளாக இன்றைக்கு பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு திமுக கவுன்சிலர் வீட்டிலும் 100 கார்டுகள், 150 கார்டுகள் இன்றைக்கும் கூட இருக்கின்றன. ஆகவே தமிழக அரசு இந்தப் போலியான குடும்பக் கார்டுகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டுமென்று நான் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். போலி குடும்ப அட்டைகளைப்பற்றி தகவல் கொடுக்கின்றவர்களுக்கு தற்போது ரூ.500 சன்மானமாக வழங்கப்படுகிறது. அதை ரூ.1000 ஆக உயர்த்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கிராமப்புறங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளை ஒருவரே கவனிக்கும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். ஒரு கடைக்கு ஒருவரே பொறுப்பு என்ற நிலையை கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ரேஷன் பொருட்களின் எடை அளவைச் சரியாகப் பராமரிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ரேஷன் கார்டுகள் பற்றி உணவுத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது நடப்பில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிகிறது. தற்போது குடும்ப அட்டைகள் வழங்கும் முறையில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயரைப் பதிவு செய்தால்இ அதைக் கண்டுபிடிக்க வழிவகை இல்லை.

இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குடும்ப அட்டைகளில் ஒரே நபர் பெயர் இடம் பெறும் நிலையும் போலி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலையும் உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளுக்கு பொருள் பெற வராத குடும்ப அட்டைகளுக்கும் கடைப் பணியாளர்கள் போலி பட்டியலிடும் நிலை உள்ளது.

இப்பிரச்னையைக் களைய தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பு மக்களின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண் பாவையை பதிவு செய்து பிரத்யேக அடையாள எண் வழங்கும் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அந்த தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி மின்னணு குடும்ப அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் பதிவு செய்யும் நிலை மற்றும் போலி குடும்ப அட்டைகள் வழங்குதல் போன்றவை களையப்படும்.

மேலும் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பட்டியலிட முடியும். போலி பட்டியலிடுவது களையப்படும். எனவே தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாகஇ மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வரும் 2012-13ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply