பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம்!

189 Views
பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம்!
mhj new
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
பொதுப் பட்டியலில் இருக்கும் பொருளாதாரத்தில் பலவீனமாக இருப்பவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதே சங்பரிவாரின் நீண்ட கால கோரிக்கையாகும். 2015ல் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் அளிக்கப்படக் கூடாது என்றும் பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு  இடஒதுக்கீடு வழங்கும் முடிவை நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை எடுத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக, நாடாளுமன்றத் தேர்தலில் உயர்சாதியினரின் வாக்குகளைக் கவர்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இந்த முடிவு அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகள், சமூக நீதி மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது.
அரசமைப்புச் சட்டத்தின் 340வது பிரிவு, இடஒதுக்கீடு சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவுள்ள இந்தியக் குடிமக்களுக்குத் தான் இடஒதுக்கீடு அளிக்க இயலும் என்று கூறுகிறது. எனவே இடஒதுக்கீடு ஒரு வகுப்பாருக்குத் தான் அளிக்க இயலுமே தவிர ஒரு வகுப்பாரில் இருக்கும் ஒரு குழுவிற்கு அளிக்க இயலாது.
அரசியல் நிர்ணயச் சபை விவாதங்களில் கல்வி மற்றும் சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர பொருளாதார நிலையை இடஒதுக்கீடு அளிக்கும் ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ள வற்புறுத்தப்படவில்லை.
1977ல் வழங்கப்பட்ட கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம், “பொருளாதார நிலையை மட்டும் அளவுகோலாக எடுத்துக் கொண்டு இடஒதுக்கீடு அளிக்கப்பட இயலாது” என்று தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இடஒதுக்கீடு என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டமோ அல்லது வறுமை ஒழிப்புத் திட்டமோ அல்ல. வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது அரசு இயந்திரங்களில் உயர்சாதியினர் அனுபவித்து வந்த ஏகபோகத்தை முறியடிப்பதற்குக் கொண்டு வரப்பட்ட ஒரு சமூக நீதி பேராயுதமே இடஒதுக்கீடு ஆகும். ஒரு மனிதரின் பொருளாதார நிலை உயரலாம், குறையலாம். ஆனால் சமூக ரீதியான பிற்படுத்தப்பட்ட தன்மை என்றும் மாறாது. எனவே தான் பொருளாதார ரீதியில் இடஒடுக்கீடு அளிப்பதை நமது அரசியலமைப்புச் சட்டமும் நீதிமன்றங்களும் அங்கீகரிக்கவில்லை.
தமிழகத்தில் முன்பு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டுவர முயற்சித்த போது அதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால் அதனை அவர் கைவிடும் நிலை ஏற்பட்டது.
எனவே சமூக நீதியின் தொட்டிலாக இருக்கும் தமிழகம் மோடி அரசு கொண்டு  வரும் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை ஒருமித்து எதிர்க்க வேண்டும். திமுக தலைவர் கோரியுள்ளபடி தமிழக சட்டமன்றத்தில் மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான இந்த நாசகர திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map