பெரும் மழை வெள்ளம் – தமிழக மக்களை இணைக்கும் பாலமாக அமைந்தது.

2718 Views

பெரும் மழை வெள்ளம் – தமிழக மக்களை இணைக்கும் பாலமாக அமைந்தது.
எதிர்காலத்தில் வெள்ளப் பேரிடரை தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்?
________________________________________________________

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் நான் ஆற்றிய உரையிலிருந்து…
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்.

Dr. MH Jawahirullah MLA President, MMK

Dr. MH Jawahirullah MLA
President, MMK

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்தும், மேதகு ஆளுநர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த வெள்ளப்பெருக்கை தமிழக அரசு கையாண்ட விதம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இந்த அவையிலே முன்வைக்கப்பட்டன.

குப்பைகளை அகற்றிய துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நன்றி
++++++++++++++++++++++++++++++++++++
வெள்ளதால் மலைபோல் குவிந்த குப்பைகளை அகற்றுவதற்காக எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகளும், இதேபோல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்து நடவடிக்கைகளையும் நாங்கள் வரவேற்கின்றோம். இந்த பணியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த அயராது பணியாற்றிய துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர்களையும் நாம் பாராட்டவும், நன்றி செலுத்தவும் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளம் பல தீய விளைவுகளை ஏற்படுத்தினாலும், சில அற்புதமான நன்மைகளையும் பறைசாற்றியுள்ளது. இதுகுறித்து ஆளுநர் தனது உரையில் ஒற்றுமை உணர்வு, மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தோடு தாமாக முன்வந்து உதவி செய்த எண்ணற்ற பொதுமக்களுக்கும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு எனது பாராட்டுகளை பதிவு செய்ய விரும்புகிறேன் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெள்ளம் பல குடிசைகளை அடித்துச் சென்றிருக்கலாம். எண்ணற்ற வீடுகளில் உள்ள பொருட்களை இழுத்துச் சென்றிருக்கலாம், பல சாலைகளை பெயர்த்திருக்கலாம், பல பாலங்களை மூழ்கடித்திருக்கலாம். ஆனால் தமிழக மக்களின் இதயங்களை இணைக்கும் பாலமாக அந்தப் பெருவெள்ளம் திகழ்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
தமுமுக – மமகவின் முன்னோடி சேவை
+++++++++++++++++++++++++++++++++++++++++++
மதங்களால், கொள்கைகளால் வேறுபட்டு நின்றாலும், பேரிடரில் சிக்கித் தவித்த மக்களை மீட்பதில் முன்னோடியாக எங்களுடைய அமைப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் தங்களது உயிரை துச்சமென கருதி, சில நேரங்களிலே தாங்களே மனித ஏணியாக மாறி பரிதவித்த மக்களை பத்திரமாக மீட்டனர். பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், பள்ளிவாசல், ஜமாத்துகள், இன்னும் பலதரப்பட்ட மதங்களை பின்பற்றக்கூடிய கொள்கைகளுடைய, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தனி மனிதர்களும் ஆற்றிய மீட்புப் பணிகள் வெள்ளம் ஏற்படுத்திய ஈரத்தைவிட தமிழர் உள்ளத்தில் உள்ள ஈரம் அடர்த்தியானது என்பதை மெய்ப்பித்திருக்கின்றது.
இனி என்ன செய்ய வேண்டும்?
+++++++++++++++++++++++++++++++++
இனி இப்படி ஒரு பேரிடர் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அரசியல் மாட்சியத்திற்கு அப்பால் இந்தப் பேரவை சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயற்கையிலேயே மிக அழகான அமைப்பில் உருவான வடிகால் அமைப்பு கொண்டுள்ளது.

வடசென்னையில் கொசஸ்தலை ஆறு, மத்திய சென்னையில் கூவம் ஆறு, தென் சென்னையில் அடையாறு ஆறு என மூன்று ஆறுகள் உள்ளன. ஆந்திராவிலிருந்து பிச்சாவரம் வரை 480 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்கிம்காம் கால்வாய் உள்ளது. மாம்பலம் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் உட்பட 13 கால்வாய்கள் உள்ளன. அது தவிர வேளச்சேரி, பள்ளிக்கரணை சதுப்புநில பகுதி உள்ளது. இத்தனை வடிகால் வசதி இருந்தும் தலைநகர் சென்னையில் வெள்ளம் சூழ்ந்ததற்குக் காரணம் ஆக்கிரமிப்புதான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் 3800 சிறிய, நடுத்தர, பெரிய நீர் நிலைகள் உள்ளன. அவை 40 டி.எம்.சி. கொள்ளளவை கொண்டவை. அந்தத் தண்ணீர் சென்னை நகரினுடைய மூன்று ஆண்டுகள் தேவைக்குப் போதுமானது. கூகுள் எர்த் வரைபடத்தைப் பார்த்தால், செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே வடிகால் பாதையின் அகலம் 800 அடியாக இருக்கின்றது. இது ஈக்காட்டுத்தாங்கலில் 123 அடியாக சுருங்கி அடையாறு அருகே 300 அடியாக விரிகின்றது. ஆக்கிரமிப்பு என்பது நீண்டகாலமாகவே நடந்துகொண்டிருக்கின்றது. சென்னையில் 6,000 கிலோ மீட்டர் அளவிற்கு சாலைகளும், வீதிகளும் உள்ளன. ஆனால் 1600 கிலோ மீட்டருக்குத்தான் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. அதைப் பராமரிப்பதும் எளிதான காரியம் இல்லை.

சென்னையில் இருந்த 40க்கும் அதிகமான ஏரிகள், சதுப்பு நிலங்கள், ஆறுகள், கால்வாய்களை ஆக்கிரமித்தன் விளைவாகத்தான் இந்த வெள்ளம்.
சென்னையில் நீங்கள் எந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எடுத்துக்கொண்டாலும், அதன்பிரமாண்டத்திற்குப் பின்னால் ஒரு நீர்நிலை உள்ளது.
சோழிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனை மிகப் பெரிய சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளது.

சென்னையில் மிகப் பெரிய மால்களில் ஒன்றான பீனிக்ஸ் மால் வேளச்சேரி ஏரியில் அமைந்துள்ளது.
எம்.ஆர்.டி.எஸ். பறக்கும் ரயில், பக்கிம்காம் கால்வாயை பாதி அடைத்துக்கொண்டு ஓடுகிறது.
மதுரவாயில் முதல் சென்னைத் துறைமுகம் வரை திட்டமிடப்பட்ட பறக்கும் சாலை கூவம் ஆற்றுக்குள் செல்ல திட்டமிடப்பட்டது.
பெரும்பாலான கல்வி நிறுவங்கள், ஐ.டி. பார்க்குகள் பலவும் ஏரிகளை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளன.
எனவே, நீண்டகால அடிப்படையில் இந்த நீர்நிலைகளிலுள்ள குடிசைகளை மட்டும் அப்புறப்படுத்துவோம் என்ற நிலையை மாற்றி அங்கே இருக்கக்கூடிய எந்த ஆக்கிரமிப்பாக இருந்தாலும் சென்னை விமான நிலையத்தினுடைய இரண்டாம் ஓடுதளமே ஒரு நீர் போகின்ற பாதையிலேதான் இருக்கின்றது. கோயம்பேடு பேருந்து நிலையம், நீர்நிலைப் பகுதியில்தான் இருக்கின்றது. அரசுக் கட்டடங்களாக இருந்தாலும், தனியார் கட்டடங்களாக இருந்தாலும், யாருடைய கட்டடங்களாக இருந்தாலும் இதுபோன்ற ஆக்கிரமிப்பை அகற்றுவதுதான் இனி எதிர்காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தடுப்பதற்கான வழியாக இருக்க முடியும். இந்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்வதோடு கூட்டுறவு வீட்டுவசதிக் கடனின் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்து அசல் தொகையை அவர்கள் செலுத்துவதற்கு உரிய கால அவகாசம் தர வேண்டும் என்றும் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply