பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

2270 Views
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
Petrol
 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலே நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும், ஆனால் தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை வெகுவாக சரிந்திருக்கும் நிலையிலும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்திக்கொண்டே செல்கிறது.
 
கடந்த ஜூன் 16 முதல் சர்வதேச விலையுடன் இணைத்து நாள்தோறும் விலை நிர்ணயம் என்ற முறை அறிமுகப்படுத்தபட்டதில் இருந்து இதுவரை சுமார் 5 விழுக்காடு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இவ்விலை உயர்வு நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியேற்ற நாளில் (26.05.2014) சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 108 டாலராக இருந்த போது சென்னையில் பெட்ரோல் விலை சுமார் ரூ.74 ஆக இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 53 டாலராக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை ரூ.73க்கு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியின் பயனை நுகர்வோராகிய பொதுமக்களை அனுபவிக்கவிடாமல் பாஜக தலைமையிலான மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. 
 
மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களிடம் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் என்ற பெயரில் வழிப்பறி செய்துவருகின்றன.
 
உலகிலேயே பெட்ரோல் டீசலுக்கான வரியை அதிகம் விதிக்கும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது. நமது அண்டை நாடுகளாக நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை வெகுவாக குறைக்கப்பட்டிருக்கும் போது, மத்திய அரசு மட்டும் பெட்ரோல் டீசல் மூலம் கிடைக்கும் கலால் வரியை அதிகரித்தே செல்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் கலால் வரி சுமார் ரூ. 99000 கோடியிலிருந்து சுமார் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதே இதற்கு எடுத்துக்காட்டு.
 
பொய்யான வாக்குறுதிகள், மாயாஜால வார்த்தைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதெல்லாம் “இந்த நடவடிக்கை கரிசனமற்ற முறையில் பொருளாதாரக் கொள்கைகளைப் பயன்படுத்தி மக்களிடம் கொள்ளையடிக்கும் செயல்” என்று கருத்து தெரிவித்தது. ஆனால் தற்போதுள்ள அதே பாஜக தலைமையிலான ஆட்சி பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதிலிருந்து பின்வாங்கி செல்வது கண்டனத்திற்குரியது.
 
மேலும் இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணநத்தம் “இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவர்கள் பசியில் வாடுபவர்கள் இல்லை” என்று ஏளனமான கருத்தை தெரிவித்துள்ளார். பாஜக அமைச்சரின் இந்தக் கருத்து நாட்டு மக்கள் மீது பாஜகவிற்கு உள்ள அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. அதேநேரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டில் பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ள நிலையில் நடுத்தர மக்கள் பலர் தினமும் ஒருவேளை உணவு மட்டுமே உட்கொள்ளும் நிலைக்கும், பல ஆண்டுகளாக ஏழைகளாகவே உள்ள கோடிக்கணக்கான இந்திய மக்கள் வெறும் வயிற்றுடனேயே படுக்கை செல்லும் நிலையிலும் உள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்பதை மத்திய அமைச்சர் அல்போன்ஸ் போன்றவர்கள் உணர வேண்டும்.
 
தீபாவளியின் போது பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தீபாவளியில் விலை குறைப்பு நடவடிக்கை என்பது உண்மையிலேயே எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு உள்நோக்கத்துடன் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார் என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
 
எனவே, தீபாவளி வரை காலம் தாழ்த்தாமல் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உடனே குறைத்து பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும், தினமும் விலை நிர்ணயம் என்ற முறையை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் வரியை ஜி.எஸ்.டியின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply