பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

2692 Views

பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயர்வு!

மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
birthcertinew
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் பெறவது என்பது முக்கியமாக உள்ளது. முக்கிய ஆவணங்களைப் பெறவும், பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலவும் பிறப்பு சான்று அவசியமாகியுள்ளது. அதேபோல் இறப்பு சான்றிதழை ஒருவர் மரணித்தபின்பு அவரது வாரிசுகள் முக்கியமான ஆவணமாக பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிறப்பு-இறப்பு சான்றிதழை பெறும் கட்டணத்தை பன்மடங்கு தமிழக அரசு உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு பிறப்பு-இறப்பு பதிவுச் சட்ட விதிகளில் திருத்தங்களை செய்து ஓராண்டு வரை பதிவு செய்யப்படாத பிறப்பு-இறப்பு பதிவு செய்ய வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.2லிருந்து ரூ.100ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஓராண்டுக்கு மேலாகப் பதிவு செய்யாத பிறப்பு-இறப்பு பதிவிற்கு வசூலிக்கப்பட்ட விண்ணப்ப கட்டணத்தை ரூ.5லிருந்து ரூ.200ஆகவும், பதிவு செய்யப்பட்ட சான்றிதழைப் பெற வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.10லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
 ஏற்கெனவே நாட்டின் மந்தமான பொருளாதார சூழல், வரிகள் என்ற பெயரில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பெட்ரோல்-டீசலின் விலையேற்றம், மானியங்கள் ரத்து எனத் தொடர் விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், தமிழக அரசின் இந்தக் கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு சமம்.
ஏழை, எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply