பா.ஜ.க.வின் பினாமி அரசாக மாறிய ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசு!

2017 Views
பா.ஜ.க.வின் பினாமி அரசாக மாறிய ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசு!
mhj1 (2)
 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
 
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும்; கொடும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை அகற்ற வேண்டும்; பீட்டா அமைப்பின் மீது தடை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினா உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக நடத்திய அமைதி வழிப் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக சட்டமன்றத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் கடைசி நாளில் காவல்துறையினர் இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் கலைக்க தடியடி நடத்தினர், அதன்பின்பு ஏற்பட்ட பல சம்பவங்களில் காவல்துறையினரின் பங்கு அதிகம்.
 
இன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின் கொண்டுவந்த கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பதிலளித்த தமிழக முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு காவல்துறையினர் எந்த குந்தகமும் விளைவிக்காமல் மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தனர். ஆனால், போராட்டக் குழுவில் சமூக விரோதிகள் மற்றும் சில அமைப்பினர் ஊடுருவியதாக தகவல்கள் கிடைத்தன. போராட்டத்தை திசைதிருப்ப சமூக விரோதிகள் முயற்சித்து வந்தனர். காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளும் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை வைத்துக்கொண்டு சிலர் போராடினர். போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தில் இருந்த வாகனங்களுக்குத் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர். சென்னையில் இதுபோல பல இடங்களில் வன்முறைகள் நடந்தன”, என்று பேசியுள்ளார்.
 
அனைத்து சமூகத்தினர் பங்கேற்ற ஒரு போராட்டத்தில் ஒரு சில புத்தி பேதலித்தவர்கள் செய்த செயலை வைத்து போராட்டங்களில் பங்கெடுத்தவர்களை சமூக விரோதிகளாக சித்தரித்துள்ளது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. 
 
போராட்டக்காரர்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டார்கள் என ஆதாரங்களைக் காண்பிக்கும் தமிழக முதலமைச்சர், காவல்துறையினர் செய்த ஆட்டோ எரிப்பு, குடிசைக்குத் தீ வைப்பு, வாகனங்களை கண்மூடித்தனமாக தாக்கி சேதம் செய்தது போன்றவற்றின் ஆதாரங்களை சட்டமன்றப் பேரவையில் வெளியிடாதது ஏன்?
 
 காவல்துறையினர் செய்த வன்முறைகளைப் பூசி மொழுகி, அவர்களைக் காப்பாற்ற ஒரு சமூகத்தினரை, குறிப்பாக சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தினரை நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கான குற்றவாளியாக்க தமிழக அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மனிதநேய அடிப்படையில் உணவுகளையும், குடிநீரையும் வழங்கிய பல சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டிருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 
மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்களைப் பார்க்கும் போது தமிழகத்தில் பாஜக முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசை தனது பொம்மை அரசாக மத்திய பாஜக அரசு இயக்கிவருகிறது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிய வருகிறது. இதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை ஆட்சியாளர்கள் நன்கு புரிந்து செயல்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
 
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply