பாப்ரி மஸ்ஜிதை நோக்கி அத்துமீறும் மதவெறிக் கும்பலைத் தடுக்க குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட வேண்டும்! தமுமுக வலியுறுத்தல்

2641 Views

பாப்ரி மஸ்ஜிதை நோக்கி அத்துமீறும் மதவெறிக் கும்பலைத் தடுக்க குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட வேண்டும்!
தமுமுக வலியுறுத்தல்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:

JSR

பாப்ரி மஸ்ஜிதை நோக்கி கனரக வாகனங்களில் கட்டுமானக் கற்களுடன் அத்துமீறிச் செல்லும் வி.எச்.பி. மதவெறிக் கும்பலைக் கட்டுப்படுத்த உ.பி. மாநில அரசும் மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவ்வாறு தாமதிக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் நேரடியாகத் தலையிட வேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பகிரங்கமாக; வன்முறையைத் தூண்டும் விதமாக அறிவிப்பு செய்து நேற்று (20.12.2015) பல கனரக வாகனங்களில் அயோத்தி நகரத்தில் நுழைந்த சமூக விரோதிகளைத் தடுக்க முனையாமல் மாநில அரசின் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவலம் நிகழ்ந்துள்ளது.

மோடியின் சமிக்ஞைக்காக காத்திருக்கிறோம்; கிடைத்தபின்னர் உடனடியாக கட்டிடம் கட்டுவோம் என வி.எச்.பி.யினர் அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து அவசியம் வாய்திறந்தே ஆகவேண்டும்.

இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவரான பிரதமர் என்ன செய்யப் போகிறார்? மதவெறிக் கும்பலை தடுக்கப் போகிறாரா? அல்லது நாசகரமான இச்செயலை வேடிக்கை பார்க்கப் போகிறாரா? ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தை அவமதித்து 1992 பாப்ரி மஸ்ஜிதைத் தகர்த்து இந்திய இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கியதைப்போல் 2010ல் நீதித் துறையை அவமான சேற்றில் தள்ளிய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் உலகமகா கட்டப் பஞ்சாயத்து போல் அலட்சியம் காட்டாது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து சமூக விரோத சக்திகளை ஒடுக்கி நிலைமையை சீராக்க வேண்டும். இல்லையெனில் பின்விளைவுகள் மோசமாகிவிடக்கூடும் என தமுமுக எச்சரிக்கிறது.

அன்புடன்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக

Leave a Reply