பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

2074 Views
பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
bus
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த பின்பும் இதுவரை இலவச பேருந்து பயண அட்டை (பஸ் பாஸ்) வழங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது.
இந்த இலவச பஸ் பாஸ் மூலம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் பயிலும் ஏழை மாணவர்கள் பலர் தங்களது பள்ளிகளுக்கு சிரமமின்றி சென்று வந்தனர். தற்போது இலவச பஸ் பாஸ் இல்லாத காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அதிக அளவு பேருந்துக் கட்டணத்தை செலவிட்டு வருகின்றனர்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, பள்ளி மாணவர்கள் சீருடையுடன் இருந்தால் அவர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனப் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவுறுத்தி இருந்தாலும், பல்வேறு பேருந்துகளில் இலவச பஸ் பாஸை நடத்துநர்கள் மாணவர்களிடம் கேட்பதாக தகவல் வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு தனி சீருடை இல்லாத சூழலில் அவர்கள் தங்களது கல்லூரி பயணத்திற்கு அதிக அளவு தொகையை செலவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழலில் தினமும் கல்லூரிகளுக்கு பயணித்து வருகின்றனர்.
எனவே, தமிழக அரசு மாணவர்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சலுகை விலை பாஸ் ஆகியவற்றை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply