பள்ளிக்கல்வியில் தமிழுக்குத் துரோகம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1721 Views
பள்ளிக்கல்வியில் தமிழுக்குத் துரோகம்!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:


பிளஸ்
 1, பிளஸ் 2 போன்ற மேல்நிலைப் பள்ளிகளுக்கான மொழிப்பாடத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்தால் போதும் என்ற புதிய பரிந்துரையை பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

 இந்தப் பரிந்துரை கல்வித்துறை வட்டாரத்திலும், பெற்றோர் – ஆசிரியர் – மாணவர் தரப்பிலும் பல்வேறு விதமான கேள்விகளையும், அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது.
இந்நாள்வரை இருந்த இரு மொழிப்பாடங்களில் ஒன்று நீக்கப்படுவது ஒருபக்கம் இழப்பு என்றால், இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்துகொள்ளலாம் என்பது பெரும் இழப்பாகும். ஆங்கில மோகம் நிறைந்துள்ள இக்காலகட்டத்தில் தமிழுக்குப் பதிலாக ஆங்கிலப் பாடத்தைத் தேர்வுசெய்யவே வாய்ப்புகள் அதிகமாகும் இதனால்   தமிழ் மொழி ஓரங்கட்டப்பட்டு அது பலவீனப்படுத்தப்படும். இந்த நடவடிக்கை தமிழுக்கு அதன் சொந்த மண்ணில் தமிழக பள்ளிக் கல்வித் துறை செய்யும் பச்சை துரோகமாகும்.
 பள்ளிக்கல்வித்துறையின்  இந்த தமிழ் விரோத நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுக்கு இரண்டு தாள்கள் உள்ள காரணத்தால் இரண்டு மொழிகளின் இலக்கணத்தைப் பயில மாணவர்களும் உதவியாக உள்ளது. இது ஒரு தாளாக மாற்றப்பட்டால்  மொழியின் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பு  பாதியாகக் குறைந்துவிடும் அபாய சூழல் உருவாகும்.
தமிழுக்குத் துரோகம் இழைக்கும் இந்த நடவடிக்கையால்  எதிர்கால சந்ததியினர் தமது தாய்மொழி திறனை முழுமையாகக் கற்றுக்கொள்ளாமல் வெறும் நுனிப்புல் மேய்ந்தவர்களாகத் திகழ்வார்கள். தாய் மொழியில் கற்பதால் கிடைக்கும் அறிவு தாய்மொழி அல்லாத மொழியில் மொழிபெயர்ப்பு செய்து கற்பதால் கிடைக்காது என்கின்றன ஆய்வுகள்.
எனவே, மேல்நிலைப் பள்ளியில் தமிழை நீக்கும் பரிந்துரையான, மொழிப்பாடத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்தால் போதும் என்ற பரிந்துரையைத் தமிழக அரசு  நிராகரித்து தற்போதுள்ள நிலையை நீடிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply