நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

2891 Views
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
nellai
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழிலும் தேர்வெழுதலாம் என்ற முறையை தற்போது மாற்றி ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என வலியுறுத்தியும், வருகைப்பதிவு குறைவு எனக் காரணம் காட்டி ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிர்வாகத்தின் முடிவை எதிர்த்தும் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தில் மாணவ, மாணவிகளைத் தாக்கியும், அம்மாணவர்கள் மீது தடியடி நடத்தியும் போராட்டத்தை காவல்துறை கலைத்துள்ளது. மாணவ, மாணவிகள் மீது கட்டவிழ்த்துள்ள இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன்.
தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிவரும் நிலையில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வியை அரசு தரவேண்டுமே தவிர தங்களது உரிமைக்காகப் போராடும் மாணவர்களை குற்றச் செயலில் ஈடுபடும் ரவுடிகளை தாக்குவது போன்று காவல்துறையை ஏவித் தாக்குவதும், அவர்கள் மீது ஆங்கிலத்தைத் திணித்து அவர்களை உயர்கல்வியைத் தொடரவிடாமல் விரட்டுவதும் ஏற்றுக்கொள்ள இயலாது.
எனவே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு மீண்டும் தமிழ்வழியில் தேர்வு எழுதவும்; மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply