நூல் ஏற்றுமதிக்கு தடைவிதித்து அதன் விலையைக் கட்டுப்படுத்தி பின்னலாடை உற்பத்தியைப் பெருக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

129 Views

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், நாள் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் 20 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

நூல் விலை 480 ரூபாய் என வரலாறு காணாத உச்ச நிலையை அடைந்துள்ளது. இதனால் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு பெரிய அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது.

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது போன்று நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். ஒரு சில தனியார் பெரும் நிறுவனங்கள் நூல்களைப் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளன.

ஒன்றிய அரசு அந்த நிறுவனங்களில் சோதனை நடத்தி நூல்களை மீட்டு பின்னலாடை உற்பத்தியை சிறப்பாக செயல்பட உதவ வேண்டும். பின்னலாடை மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பைக் குறைக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply