நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு!

2314 Views
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு!
mhj 1
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மாநில மத்திய அரசுகள் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 12ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், ஒரு கோடி மாணவர்கள், அஞ்சலட்டை, மின்னஞ்சல்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது எனவும் கடந்த 4.7.2017ல் நடைபெற்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2007ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நுழைவுத் தேர்வு இன்றி +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றதால் பல ஆண்டுகாலம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்து அவர்கள் மருத்துவக் கல்வியைப் பயின்று இன்று மருத்துவர்களாக சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.
ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பறிக்கவும், தமிழகத்தில் தழைத்து நிற்கும் சமூகநீதி கொள்கைக்கு முடிவு கட்டவுமே நீட் தேர்வு மத்திய பாஜக தலைமையிலான மக்கள் விரோத அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிகத்தில் இதுபோன்ற தேர்வுகளால் சமூகநீதி குலையாமல் பாதுகாத்திட கடந்த 27.03.2017 அன்று பெரியார் திடலில் கூடி ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் மனிதநேய மக்கள் கட்சியும் பங்குபெற்றுள்ளது.
‘நீட்’ தேர்வை ஒட்டுமொத்தமாகவே ரத்து செய்துவிட்டு, +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்வு செய்யவேண்டும் என்றும் 2016ஆம் ஆண்டுவரை பின்பற்றப்பட்டு வந்த அந்தப் பழைய நிலை தொடர தேவையான சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும்,
தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே கிடைத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிட வேண்டும்,
ஏற்கெனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றிட பேரழுத்தம் கொடுக்க வேண்டும், என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக ஜூலை 12 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவிருக்கும் பெருந்திரள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது. இப்போராட்டம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.
எமது ஆதரவு மாணவ இயக்கமான சமூக நீதி மாணவர் இயக்கமும் இந்த பெருந்திரள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
 அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply