நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

2512 Views
நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
Newzealand
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நியூஸிலாந்து நாட்டில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வன்மையான கண்டனத்திற்குரியது. நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் என்ற நகரில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதனை காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளது நெஞ்சைப் பதறச் செய்கிறது. இந்தத் தாக்குதலில் 49 பேர் மரணடைந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
  இந்தக் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அவர்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் உயரிய சுவனத்தை வழங்குவானாக என பிரார்த்திக்கின்றேன்.
நியூசிலாந்து பிரதமர் இந்த பயங்கரவாத நடவடிக்கை நடைபெற்ற தினம் தனது தேசத்தின் “கறுப்பு தினம்” என்று வர்ணித்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தான் நம்மவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்பினால் தூண்டப்பட்ட வெள்ளை நிற இன வெறியர்கள் என்று தெரிய வந்துள்ளது. தொடர்ச்சியான முஸ்லிம் விரோத போக்கே இந்த பயங்கரவாத நடவடிக்கைக்கு காரணமாக உள்ளது.
இதுபோன்ற வெறுப்புணர்வை தூண்டும் நபர்களை தனிமைப்படுத்த நியூஸிலாந்து அரசும் அந்நாட்டு மக்களும் ஒன்றுசேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
 தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply