தோப்பில் முஹம்மது மீரான் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

1596 Views
தோப்பில் முஹம்மது  மீரான்  மறைவு: 
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்
 பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் இன்று மரணித்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கின்றது.
குமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தில் பிறந்த தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் ”ஒரு கடலோர கிராமத்தின் கதை” , சாய்வு நாற்காலி, கூனன் தோப்பு, அஞ்சுவண்ணம் தெரு உள்ளிட்ட 6 நாவல்கள்,  அன்புக்கு முதுமை இல்லை,  தங்கராசு, அனந்த சயனம் காலணி உள்ளிட்ட 5 சிறுகதை தொகுப்பு எழுதி வெளியிட்டவர். சமீபத்தில் அவர் வெளியிட்ட “குடியேற்றம்” புதினம் தமிழகத்தில் குடியேறி வாழும் மக்களின் பூர்விகத்தைச் சிறப்பாக ஆய்வு செய்கிறது.   பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பசீர் அவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட மொழி பெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது சாய்வு நாற்காலி நாவல் காஷ்மீரி மொழியிலும், கடலோர கிராமத்தின் கதை ஆங்கிலம் மற்றும் ஜெர்மனி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாதமி விருது மட்டுமின்றி  தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்  விருது, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருது,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருதுகள்  முதலியவற்றைப் பெற்றுள்ளார்.
என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகுந்த நட்புடன் பழகி வந்த தோப்பில் மீரான் அவர்கள் நாம் வெளியிடும் மக்கள் உரிமை இதழில் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றைத் தொடராக எழுதி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு நெல்லை பேட்டையில் அவரது இல்லத்தில் சந்தித்த போது சமுதாய அக்கறையுடன் பல சிந்தைகளைப் பகிர்ந்து கொண்டார்.
தோப்பில் மீரான் சம கால தமிழக வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்துக் கொண்ட ஒரு இலக்கிய ஜாம்பவானாக விளங்கியவர். அவரது இறப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு மிகப் பெரும்  இழப்பாகும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு மறுமையின் நற்பேறுகளை வழங்கப் பிரார்த்தனை செய்கிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply