தேர்தல் சீர்திருத்தப் போராளி எம்.சி.ராஜ் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

1316 Views
தேர்தல் சீர்திருத்தப் போராளி எம்.சி.ராஜ் மரணம்!
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
ceri
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
மனித உரிமை ஆர்வலரும், தலித் மக்களின் உரிமைகளுக்காக அரும்பாடு பட்டவரும், இந்தியாவில் விகிதாச்சார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த அறிவார்ந்த ரீதியில் செயல்பட்டவருமான எம்.சி. ராஜ் அவர்கள் இன்று காலை மரணமடைந்த செய்தி அறிந்து துக்கமடைந்தேன்.
தமிழகத்தில் பிறந்த அவர் கர்நாடகத்தில் வாழ்ந்து வந்தாலும் பூசக்தி கேந்திரம், நில மீட்பு இயக்கம் என பல மக்கள் இயக்கங்களைத் தோற்றுவித்தார். இவரும் இவரது ஆற்றல்மிக்க மனைவி ஜோதியும் இணைந்து தலித் மக்களின் உரிமைகளுக்கான முன்னணி செயற்பாட்டாளராக விளங்கினார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவரை தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் முதன் முதலாக சந்தித்தேன். இந்தியாவில் தற்போது உள்ள அதிக வாக்குகளைப் பெற்றவரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறை எவ்வாறு மக்களின் உண்மையான விருப்பங்களைப் பிரதிபலிக்காத தேர்தல் முறையாக இருக்கின்றது என்பதை அவர் அபாரமாக பல தரவுகளை முன்வைத்து நாடு முழுவதும் விளக்கி வந்தார். விகிதாச்சார தேர்தல் முறை குறித்து அறிவார்ந்த தளத்தில் பரப்புரை செய்வதற்காக அவர் அமைத்த CERI (இந்தியாவில் தேர்தல் சீர்த்திருத்தத்திற்கான பேரவை) என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பில் நமது மனிதநேய மக்கள் கட்சியும் அங்கம் வகிக்கின்றது. உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள விகிதாச்சார தேர்தல் முறை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சட்டம் இயற்றும் அவைகளில் நியாயமான பிரதிநிதித்துவத்தை அளிக்கும் என்ற கருத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றதில் அவரது பங்களிப்பு ஒப்பற்றது.
 70 ஆண்டு கால விடுதலைப் பெற்ற இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையினால் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு மாறாக குறைந்த சதவிகித வாக்குகள் பெற்றவர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வருவது குறித்தும், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் சில சமூகங்களுக்கு மிகக் குறைவான பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பது குறித்தும் அவர் விலாவாரியாக எடுத்துரைத்து விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு மாறுவதே உலகின் மிகப் பெரும் ஜனநாயகம் பொலிவடைவதற்கு வழி வகுக்கும் என்று ஆணித்தரமாக வாதித்தார். இந்தப் பணியில் அவருடன் இணைந்து செயலாற்றிய தருணங்கள் என் வாழ்வில் மிகவும் பயனுள்ள நாட்களாகும்.
எம்.சி. ராஜ் அவர்கள் ஒரு செயற்பாட்டாளர் என்பதைத் தாண்டி ஒரு எழுத்தாளராகவும் முத்திரைப் பதித்தார். அவர் அனைவர் மீதும் அன்பு காட்டும் மனிதநேய மிக்க ஆளுமையாக விளங்கினார். அவரது மரணம் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை மலர வைக்க நடைபெற்று வரும் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவே. இருப்பினும் அவர் எடுத்த பணியை இன்னும் வீரியமாக்கி உண்மையான ஜனநாயகம் மலர தொடர்ந்து அயராது பாடுபட நாம் உறுதி எடுப்போம்.
திரு. எம்.சி. ராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி ஜோதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் சக செயற்பாட்டாளர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply