2654 Views
தேசிய குடிமக்கள் ஆவணம் மூலம் 40 லட்சம் மக்களை அகதிகளாக்கிய அசாம் பாஜக அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை:
வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்திற்கு, 1985-ஆம் ஆண்டு சிறப்பு ஒப்பந்தத்தின்படி 1971-ம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்குள் அம்மாநிலத்திற்குள் வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட்டு அசாம் மாநிலத்தில் உள்ள 3.29 கோடி பேரில் 2.89 கோடி பேர் மட்டுமே இந்திய குடிமக்கள் என்றும் மீதமுள்ள 40 லட்சம் பேர் உரிய ஆவணங்கள் இருந்தும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசின் இதுபோன்ற மோசமான நடவடிக்கையால் சொந்த நாட்டிலேயே 40 லட்சம் மக்கள் அகதிகளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காலங்காலமாய் அசாமில் வசித்து அசாமின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வந்த 40 லட்சம் பேரை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என முத்திரைக் குத்தி அவர்களை அகதிகளாக்க நினைக்கும் அசாம் மாநில பாஜக அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களையும் பாஜகவிற்கு எதிராக உள்ளவர்களையும், அசாம் சிறுபான்மை முஸ்லிம்களையும் தனித்து விடவே அசாம் மாநில பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
எனவே, அசாம் அரசு தேசிய குடிமக்கள் ஆவணத்தில் விடுபட்டுள்ள 40 லட்சம் பேரை உடனடியாக சேர்த்து புதிய ஆவணங்களை வெளியிட வேண்டும் எனவும், அதற்கு மத்திய அரசு அசாம் மாநில அரசிற்கு உரிய அழுத்தங்களைத் தரவேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி