1694 Views
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை எதிர்த்து மறியல் போராட்டம்:
கைது செய்யப்பட்டுள்ள ஸ்டாலின் உள்ளிட்டோரை உடனே விடுவிக்க வேண்டும்!
கைது செய்யப்பட்டுள்ள ஸ்டாலின் உள்ளிட்டோரை உடனே விடுவிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்தினரையும், காயம் அடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள தமிழக எடப்பாடி தலைமையிலான அரசு, அதிகார மமதையில் ஒரு சர்வாதிகார அரசாக விளங்குகிறது.
வாழ்வாதாரத்திற்குப் போராடும் மக்கள் மீதும், அதற்கு ஆதரவாக இருக்கும் எதிர்க்கட்சிகள் மீதும் காவல்துறையை ஏவிவிட்டு அவர்களை அடக்கிவிடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைத்துக் கொண்டிருப்பது ஒருபோதும் நிஜமாகப் போவதில்லை. மக்களுக்காகப் போராடும் மக்கள் பிரதிநிதிகளையும் அராஜகமான முறையில் கைது செய்திருப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
எனவே, கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து திமுகவினரையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய மக்க¢ள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி