தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு படுகொலை: இனி ஒரு நிமிடம்கூட ஆட்சியில் நீடிக்க எடப்பாடி அரசுக்கு உரிமை இல்லை!

2412 Views
தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு படுகொலை: இனி ஒரு நிமிடம்கூட ஆட்சியில் நீடிக்க எடப்பாடி அரசுக்கு உரிமை இல்லை!
22688113_1194579960686576_5440787670266251932_n
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக்கூடாத நிகழ்வுகளெல்லாம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடைபெற்று வருவது சொல்லொண்ணா துன்பத்தை அளித்து வருகின்றது.
ஒரு பன்னாட்டு பெரு முதலாளி நிறுவனத்தைக் காப்பதற்காக அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாக தூத்துக்குடியில் கொல்லப்பட்டுள்ளார்கள். இதுவரை எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால் இரு சிறுவர்கள் உட்பட இறந்தவர்களின் எண்ணிக்கை 15ஐ தாண்டும் என்று களத்தில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். மே 22 அன்று நிகழ்ந்த இந்த அரச பயங்கரவாதத்தின் தொடர்ச்சியாக இன்றும் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு சிலர் கொல்லப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி தமிழக மக்கள் உள்ளங்களையெல்லாம் ரணகளமாக்கியுள்ளது.
மக்களுக்கும் மண்ணுக்கும் மிகப்பெரும் கேட்டை விளைவித்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராடி வரும் மக்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் திட்டத்துடன் மத்திய பாஜக அரசின் எடுபிடியாகச் செயல்படும் எடப்பாடி அரசு செயல்பட்டு வருவது வெளிப்படையாகத் தெரிகின்றது.
ஒரு பெரும் முதலாளி நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக தூத்துக்குடியில் நடைபெற்றது போல் வேறெங்கும் மக்களைப் படுகொலை செய்யும் செயலில் எந்தவொரு மாநில அரசும் திட்டமிட்டு செயல்பட்டதில்லை.  சட்டம் ஒழுங்கைப் பேண கடமைப்பட்டுள்ள காவல்துறை சட்ட விதிகளை மீறி போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்களைக் குறிவைத்து சுட்டுத் தள்ளியுள்ளனர். சீருடை அணியாமல் ஒரு கொலைகாரக் கும்பலைப் போல் மக்களையும், மண்ணையும் காக்கப் போராடியவர்கள் மீது எடப்பாடி அரசின் காவல்துறையினரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் நாம் இருப்பது ஜனநாயக நாட்டிலா-? அல்லது ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் ஆளும் நாட்டிலா? என்ற கேள்வியை சாதாரண மக்கள் உள்ளத்திலும் எழுப்பியுள்ளது. சிறுவர், பதின்பருவத்தினரைக் கூட விட்டுவைக்காமல் காவல்துறையை ஏவி காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய எடப்பாடி அரசு, இனி ஒரு நிமிடம்கூட பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களைப் பார்க்கச் சென்ற அரசியல் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எடப்பாடி அரசின் குரூர புத்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இன்று தூத்துக்குடியில் பெரும் பதட்ட நிலையை உருவாக்கி, மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை அழித்தொழிக்கும் செயலில் எடப்பாடி அரசு ஈடுபட்டுள்ளது. நேற்றைய தினம் துப்பாக்கிச் சூடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலைக் குறித்து பல பொய்யான தகவல்கள் தரப்பட்டுள்ளன. அத்துடன் மக்களின் உணர்வுகளை மதித்து நடப்போம் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டது பொய் என்பதை இன்றைய தூத்துக்குடி காட்டுத் தர்பார் நிகழ்வுகள் மெய்ப்படுத்துகின்றன.
தூத்துக்குடியில் எடப்பாடி அரசு துப்பாக்கிச் சூடு மூலம் நடத்திய படுகொலைகளைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் வரும் மே 25 (வெள்ளி) அன்று நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்குகொண்டு அறவழியில் போராட வருமாறு அனைவரையும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply