திரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் சட்டசபையில் மிகமோசமாக தாக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

2412 Views

திரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் சட்டசபையில் மிகமோசமாக தாக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

mhj1 (2)

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

இன்று (18.02.2017) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரும் தலைக்குனிவாக மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது.

திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் நம்பிக்கைக் கோரும் தீர்மானம் குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகள் பேரவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தன. அரசுக்கு நம்பிக்கை வாக்கில் வெற்றிபெறத் தேவையான ஆதரவு இருக்கும் போது இந்தக் கோரிக்கையை ஏற்று சுமூகமாக இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம். இதே நேரத்தில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலர் வரம்பு மீறி நடந்து கொண்டதும் தேவையற்ற வருத்தத்திற்குரிய நிகழ்வாகும்.

அவையில் ஒரு அசாதாரண நிலை நிலவும் சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்னொரு நாளுக்கு ஒத்திவைத்திருந்தால் விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம். இதைத் தவிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சூழலில் நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது விரும்பத்தக்க ஜனநாயக நெறிமுறை அல்ல.

சபாநாயகர் உத்தரவின் அடிப்படையில் சபையிலிருந்து வெளியேற்றப்படும் போது எதிர் கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத்தகைய வரம்பு மீறிய செயலில் ஈடுபட்ட சபைக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply