தலித்களைத் தாக்கி வீடுகளை சேதமாக்கிய வன்முறைக் கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

691 Views
தலித்களைத் தாக்கி வீடுகளை சேதமாக்கிய வன்முறைக் கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் தலித் மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரமான வன்முறையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டமைக்காக ஒரு பிரிவினரை அதே சாதியைச் சேர்ந்த இன்னொரு பிரிவினர் தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை பெரும் கலவரமாக உருவெடுத்துள்ளது.
சாதி பித்துப் பிடித்த இந்த கொலைவெறிக் கும்பலையும், அதனால் ஏற்பட்ட வன்முறையையும் மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திரு. தொல் திருமாவளவன் வெற்றிப் பெற்றுவிடுவார் என்ற களசூழல் இருக்கும் நிலையில் திட்டமிட்டு இதுபோன்ற வன்முறை நடத்தப்பட்டுள்ளது.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலும் சமூகவலைத் தளத்தில் பரப்பப்பட்ட ஒரு ஒலிப்பதிவை அடிப்படையாகக் கொண்டு அது வதந்தி என்றும் தெரியாமல் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
நாடு முழுவதும் வெறுப்பு பிரச்சாரத்தை உமிழ்ந்து மத மோதல்களை உருவாக்கிய பாஜகவின் கூட்டணிக் கட்சியினர் இப்பயங்கர கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு இந்த தாக்குதல்கள் தொடர்பாகவும், இந்த தாக்குதல்களுக்கு முக்கியக் காரணமானவர்கள் மீதும் உரிய விசாரணையை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு வீடு மற்றும் உடைமைகளை இழந்த பொன்பரப்பி தலித் சமூக மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத்தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர் சிகிச்சை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்காக நிவாரணம் வழங்க வேண்டும். அப்பகுதியில் இனி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்த  வேண்டும் என்றும் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map