தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

2393 Views
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை
ரத்து செய்ய வேண்டும்:
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்த திரு.நசிமுதீன் இ.அ.ப., தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு அந்த ஆலை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுத்தார். கடந்த பல மாதங்களாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பாக இவரை சந்திப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் கூட நியாயத்தை உணர்ந்து அவர்களை சந்திக்க மறுத்து விட்டார். நேர்மையான, திறமையான அலுவலரான நசிமுதீன் அவர்கள் தற்போது வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாணையம், ஸ்டெர்லைட் ஆலை குறித்து விசாரிக்க குழு ஒன்றை நியமித்திருக்கும் சூழலில் நசிமுத்தீன் வேறு துறைக்கு மாற்றப்பட்டிருப்பது ஆரோக்கியமான நடவடிக்கையாகத் தோன்றவில்லை.
தமிழகம் சார்பு வழக்குறைஞர்களின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு  ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டைச் சாராத நீதிபதியின் தலைமையில் தேசிய பசுமைத் தீர்ப்பாணையம் விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. இச்சூழலில்  தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாக உள்ளது.
எனவே இப்பிரச்னை குறித்து நன்கு அறிந்த திரு. நசிமுதீன் அவர்களின் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான விசாரணை முடியும்வரை அவர் அந்தப் பணியில் தொடருவதற்கு தமிழக அரசு வழிவகுக்க வேண்டும். இதுதான் தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. எனவே இந்தக் கோரிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
தேசிய பசுமைத் தீர்ப்பாணையம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விசாரணை நடத்த நியமித்திருக்கக் கூடிய விசாரணைக் குழுவை நசிமுதீன் அவர்கள் அந்த விசாரணை முடியும் வரையிலாவது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நீடித்தால் தான் தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் வழங்குவதாக அமையும்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply